வைக்கோலுக்கு பதில் மரத்தூள்...காளான் வளர்ப்பில் கலக்கலான டெக்னிக்!
கன்னியாக்குமரி மாவட்டத்தில் காளான் வளர்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்துதான் இந்த மாவட்டத்திற்கு விற்பனைக்காக காளான் வரவழைக்கப்படுகிறது. இந்நிலையில் இங்குள்ள சிதறால் பதித்தவிளை பகுதியைச் சேர்ந்த பிஎஸ்சி வேளாண்மை படித்த பட்டதாரியான கவின்ராஜ் என்ற இளைஞர் முழுக்க முழுக்க இயற்கை முறையில் காளானை உற்பத்தி செய்து வருகிறார். காளான் வளர்ப்பு என்றாலே அதற்கான படுக்கையைத் தயாரிக்க வைக்கோலைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் இவர் மரத்தூளைக் கொண்டு படுக்கை தயாரித்து காளான் வளர்க்கிறார். இதனால் சில அனுகூலங்களும் கிடைக்கின்றன. இதுகுறித்து அறிய கவின்ராஜைச் சந்தித்தோம்.
``பிஎஸ்சி அக்ரி படித்திருக்கிறேன். அக்ரி படிக்கும்போதே இயற்கை விவசாயத்தின் மீது எனக்கு அதிக ஆர்வம். படித்து முடித்தவுடன் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் 2 வருடம் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறும் வேலையை செய்து வந்தேன். அதன்பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள வேளாண்மை கல்லூரியில் 8 மாத காலம் பணியாற்றினேன். அப்போது காளான் வளர்ப்பு குறித்த தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டேன். அந்த அனுபவத்தை வைத்து காளான் வளர்த்து விற்பனை செய்யலாம் என முடிவு செய்தேன். பிஇ படித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எனது உறவினரான அருண் சிவாவுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினேன். அவரும் காளான் வளர்ப்பு நல்ல லாபகரமான தொழில்தான், இதை தாராளமாக செய்யலாம் என ஊக்கப்படுத்தினார்.
ஒருவழியாக காளான் வளர்க்கலாம் என துணிச்சலுடன் களம் இறங்கினேன். ஆனால் அதற்கான இடம் என்னிடம் இல்லை. இருந்தபோதும் எனது வீட்டின் மொட்டை மாடியில் காளான் வளர்க்கலாம் என முடிவு செய்தேன். அதன்படி மொட்டை மாடியில் அதற்கான கொட்டகை அமைத்தேன். வீட்டின் ஓரத்தில் காலியாக இருந்த சிறிய இடத்திலும் ஒரு கொட்டகை அமைத்தேன். வீட்டின் மாடியில் பால் காளானும், வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் சிப்பி காளானும் வளர்க்க முடிவு செய்தேன். காளானை வளர்க்கும்போது எந்த விதத்திலும் கெமிக்கல் சேர்ந்துவிடக்கூடாது, 100 சதவீதம் இயற்கை முறையில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். காளான் உற்பத்தி செய்பவர்கள் அதை வளர்க்க பெட் அமைப்பார்கள். பெட் அமைக்கும்போது வைக்கோல் கொண்டு அமைத்து அதன் உள்ளே காளான் விதைகளைப் போடுவார்கள். வைக்கோலைப் பதப்படுத்தும் வகையில் பார்மலிங் பயன்படுத்துவார்கள்.
அதை நான் மாற்றி யோசித்தேன். திருவனந்தபுரம் வேளாண்மை கல்லூரியில் காளான் வளர்க்கும்போது மரப்பொடிகளை பயன்படுத்தி வளர்த்தனர். அந்த முறைப்படி காளான் வளர்க்க முடிவு செய்தேன். எங்கள் பகுதியில் ரப்பர் விவசாயம் அதிகமாக நடந்து வருகிறது. ரப்பர் மரத்தில் இருந்து ரப்பர் பால் எடுத்த பிறகு மரத்தை வெட்டி விடுவார்கள். ஆலையில் மரத்தை பலகையாக மாற்றும்போது அதில் கிடைக்கும் மரப்பொடிகளை வாங்கி வந்து நான் பெட் தயாரிக்க முடிவு செய்தேன். அந்த மரப்பொடியை இட்லி அவிக்கும் முறைப்படி ஆவியில் வைத்து வேகவைத்து அதன்பிறகு பெட் தயாரிப்புக்கு பயன்படுத்தி வருகிறேன். பெட் தயாரிக்கும்போது முதலில் மரப்பொடி போட்டு அதன் மீது காளான் விதை, அதன்மேல் மரப்பொடி என 3 லேயர்கள் போடுவோம். பால் காளான் தயாரிப்பதற்கும் இதே முறையில் பெட் தயாரிப்போம்.
25 நாள் ஆனதும் அதன் மீது மண்புழு உரம், தேங்காய் மட்டை (கதம்பை) தூள் ஆகியவற்றைப் போடுவோம். இவற்றை நேரடியாக போடாமல் அதனையும் மரப்பொடி அவித்ததுபோல் அவித்து அந்த பெட்டின் மீது போடுவோம். சிப்பிக் காளான், பெட் தயாரித்து 25 நாட்களில் முதல் அறுவடைக்கு தயாராகிவிடும். பால் காளான் 40வது நாளில் முதல் அறுவடைக்குத் தயாராகிவிடும். முதல் அறுவடை முடிந்த பிறகு 10 நாட்களுக்கு ஒருமுறை மகசூல் கிடைக்கும். சிப்பிக்காளானில் 120 நாட்கள் வரை மகசூல் கிடைக்கும். பால் காளானில் 160 நாட்கள் வரை மகசூல் கிடைக்கும். இதற்கு காரணம் மரப்பொடிகளைக் கொண்டு பெட் தயாரிப்பதுதான். மரப்பொடிகள் எளிதில் கெட்டுவிடாது. இதனால் நீண்ட நாட்கள் நமக்கு பலன் கிடைக்கும். ஆனால் வைக்கோல் கொண்டு காளான் வளர்க்கும்போது சுமார் 60 நாட்களில் ஒரு பெட்டின் காலம் முடிந்துவிடும். அதன்பிறகு வேறு பெட் தயாரிக்க வேண்டும்.
(கவின்ராஜ் தெரிவித்த மேலும் சில தகவல்கள் அடுத்த இதழில் இடம்பெறும்)
தொடர்புக்கு:
கவின்ராஜ்: 96004 15871.