வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்’ - டெல்லி காற்று மாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடெல்லி: “சுற்றுச்சூழலை பாதிக்கும்படி வைக்கோலை எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் வைத்தால், அது சரியான செய்தியை அனுப்பும்.” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். பட்டாசுகளை வெடிப்பதாலும், வைக்கோலை எரிப்பதாலும் தலைநகர் டெல்லியின் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, வைக்கோலை எரிக்கும் விவசாயிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் நீதிபதி பி.ஆர்.கவாய், "சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விவசாயிகள் சிலர் வைக்கோல்களை எரிப்பதை எப்படி ஏற்பது?.
சுற்றுச்சூழலை பாதிப்பது விவசாயிகள் என்பதால் நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அவர்களில் சிலரை சிறையில் வைத்தால், அது சரியான செய்தியை அனுப்பும்."என தெரிவித்தார். அத்துடன் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காலிப் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.