நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியது: கரையோர மக்களுக்கு 3ம் கட்ட எச்சரிக்கை
ஆண்டிபட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை தாண்டிய நிலையில், கரையோர மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயர வைகை அணை உள்ளது. இதில் தேக்கப்படும் தண்ணீர் மூலம் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கடந்த ஜூன் 15ம் தேதி அணையின் நீர்மட்டம் 60 அடியை தாண்டியதால் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஜூன் 25 முதல் 7 நாட்கள் வரை ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் திறப்பு இருந்தாலும் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பால், வைகை அணைக்கு நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும் வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 26ம் தேதி 66 அடியை எட்டியது. அப்போது கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று முன்தினம் நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தது.
இதையடுத்து நேற்று காலை 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நீர்மட்டம் 69 அடியை எட்டியது. காலை 11 மணியளவில் 3வது மற்றும் இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. வைகை கரையோர பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அணையின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் உபரிநீர் திறக்கப்படும். இம்முறை அணையில் 71 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க அதிகாரிகள் திட்டமிடப்பட்டுள்ளனர். அதன்பின்னர் உபரிநீர் வெளியேற்றப்படும். அணையின் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.