வைகை அணையில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை
*கலெக்டர் பார்வையிட்டார்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பாக நேற்று நடைபெற்ற பேரிடர் கால மீட்பு ஒத்திகைப் பயிற்சியை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டார்.
பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு, சமூக ஆர்வலர்களுக்கு ஆப்த மித்ரா பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் பேரிடர் காலங்களில் ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கு, தீ விபத்து போன்றவற்றிலிருந்து பொதுமக்கள் தங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் வனத்துறைக்கு கலெக்டர் வழங்கினார்.மேலும், இன்றைய தினம், பேரிடர் காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது, வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய ரப்பர் டியூப், காலியான எல்பிஜி சிலிண்டர் முதலியவை பயன்படுத்தி தப்பிக்கும் முறை, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை படகுமூலம் மீட்பது, நீரில் மூழ்கி இருப்பவர்களை ஸ்கூபா டைவிங் சூட் அணிந்து மீட்பது, தண்ணீர் சூழ்ந்த இடங்களில் மிதவை பம்பு மூலம் தண்ணீரை வெளியேற்றுவது முதலியவை குறித்த செயல்முறை விளக்கங்கள் 45 தீயணைப்பு வீரர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது.
கலெக்டரும் ஒத்திகை பயிற்சியில் பங்கேற்று கொண்டார்.இந்நிகழ்வில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மாவட்ட அலுவலர் ஜெகதீஷ், உதவி மாவட்ட அலுவலர் குமரேசன், வைகை அணை செயற்பொறியாளர்கள் சேகரன், பரதன், வட்டாட்சியர் ஜாஹிர் உசேன், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.