வடமதுரையில் ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வசதியாக ‘ஓபன் டிவைடர்’
*பொதுமக்கள் கோரிக்கை
வடமதுரை : வடமதுரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள், கர்ப்பிணிகளை எளிதில் சிகிச்சைக்கு அழைத்து செல்ல வசதியாக நான்கு வழிச்சாலை டிவைடரில் பாதை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமதுரை நகரின் மேற்கு பகுதியில் செல்லும் திருச்சி- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் இடதுபுறம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல் பிரிவு, சித்தா பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, பொது மருத்துவம் மற்றும் ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே வசதிகள் உள்ளது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வடமதுரை நகர் மற்றும் அருகேயுள்ள வேல்வார்கோட்டை, வெள்ளப்பொம்மன் பட்டி, செங்குளத்துப்பட்டி, பாடியூர், எட்டிகுளத்துப்பட்டி, எஸ்.புதுப்பட்டி, தும்மலக்குண்டு, கொசவபட்டி, அழகர்நாயக்கன்பட்டி பெரும்புள்ளி, சிங்காரகோட்டை, கொட்டத்துறை, சீலபாடியான்களம், மோலப்பாடியூர், மூணாண்டிபட்டி, டி.என்.பாறைப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இங்கு பிரசவ வார்டு செயல்பட்டு வருவதுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையும் உள்ளது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையம் நான்கு வழிச்சாலையில் இருப்பதால் எப்போதும் அதிகளவு வாகனங்கள் வந்து செல்லும். இங்கு சிகிச்சை பெற வருவதற்கு வசதியாக ஆரம்ப சுகாதார நிலையம் முன்புறம் உள்ள பாதை அமைப்பு இல்லை. இதனால் வேல்வார்கோட்டை பிரிவிலிருந்து மோர்பட்டி மூக்கர பிள்ளையார் கோயில் பிரிவு வரை உள்ள கிராமங்களை சேர்ந்த நோயாளிகள், கர்ப்பிணிகள் பல்வேறு பரிசோதனைகள், பிரவசத்திற்கு வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக பிரசவத்தின் போது கர்ப்பிணிகளுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்கின்றனர். அப்போது இந்த சுகாதார நிலையத்தின் முன்பகுதியில் உள்ள நான்கு வழி சாலையில் பாதை வசதி இல்லாத காரணத்தால் நீண்ட தூரம் சென்று சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும் சில நேரங்களில் நான்கு வழிச்சாலையில் ஏற்படும் விபத்தில் சிக்குபவர்களை முதலுதவி சிகிச்சை அளிக்க இங்கு தான் அழைத்து வரப்படுகின்றனர். இவர்களையும் மேல் சிகிச்சைக்கு வேகமாக அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே அவசர காலத்தில் நோயாளிகள், கர்ப்பிணி பெண்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எளிதில் கொண்டு வருவதற்கும், மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்லவும் ஏதுவாக முன்புறம் உள்ள நான்கு வழிச்சாலை டிவைடரில் பாதை அமைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.