தொடர் விடுமுறையையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக ‘ஜில்’ கிளைமேட் நிலவி வருகிறது. ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மட்டுமல்லாமல் வேலை நாட்களிலும், குறிப்பிடத்தக்க அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சுந்திர தினம், நேற்று கிருஷ்ணஜெயந்தி, இன்று வார விடுமுறை என தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. கடந்த 2 நாட்களை விட இன்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்தனர். படகு இல்லம், ஏரி, மான்பூங்கா, அண்ணா பூங்கா, ேலடீஸ் சீட், ஐந்திணை பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் கோயில், தலைச்சோலை, பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்கள் களை கட்டியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் அங்குள்ள ‘லாட்ஜ்’ , ஓட்டல்களில் முன்பதிவு செய்திருந்தனர். இதனால், அவர்கள் சிரமமின்றி சுற்றுலா பகுதிகளை சுற்றி பார்த்து ரசித்தனர்.
இதேபோல் மேட்டூர் அணை பூங்காவிலும் சுற்றுலாப்பயணிகள் இன்று அதிகமாக வந்திருந்தனர். அவர்கள் ஆற்றில் குளித்து மகிழ்ந்ததுடன், அணைக்கட்டு முனியப்பனுக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு சமைத்து உண்டனர். மேலும் பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டி, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிலும் இன்று சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தில் இருந்தும் இன்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவிகளில் குளித்தும், ஆற்றில் பரிசல் சவாரி சென்று காவிரியின் அழகை ரசித்தும் மகிழ்ந்தனர். சுற்றுலாப்பயணிகள் வருகையால் மீன் உள்ளிட்ட கடைகளில் வியாபாரம் களை கட்டியது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையிலும் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் அங்கு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.