விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஏற்காடு: விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்தும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும், சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். மற்ற நாட்களை விட விடுமுறை தினத்தில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். அதன்படி இன்று ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நேற்றிரவே ஏராளமானோர் ஏற்காட்டிற்கு வந்துவிடுதிகளில் அறை எடுத்துதங்கினர். இன்று காலை முதலே கார், பைக்குகளில் வந்து குவிந்தனர். கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் இதமான சீதோஷண நிலை காணப்படுகிறது. மலைப்பாதையில் வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள், மலையில் மேகங்கள் தவழும் ‘சேலம் வியூவை’ பார்த்து ரசித்தனர். ஏற்காடு தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை கண்டும், அண்ணா பூங்கா, கண்ணாடி மாளிகை, சுற்றுச்சூழல் பூங்கா, ரோஜா தோட்டம், குகை கோயில், காட்சி முனை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
படகு இல்லத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் அங்குள்ள கடைகளில் விற்பனை களை கட்டியது. ஏற்காடு ரவுண்டா உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதேபோல் மேட்டூர் அணை கரையோர பகுதிகளில், குறிப்பாக அணை பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. டெல்டா பாசன கால்வாயில் குளித்து மகிழ்ந்ததுடன், அணைக்கட்டு முனியப்பனுக்கு ஆடு,கோழி பலியிட்டு அதனை சமைத்து உண்டு மகிழ்ந்தனர். அணை பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்களில் குடும்பத்துடன் விளையாடி உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து குறைந்து குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நேற்று முதல் நீக்கப்பட்ட நிலையில் இன்று சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் மெயின் அருவி, ஆற்றில் குளித்தும், பரிசல் சவாரி சென்று காவிரியின் அழகை ரசித்தும் மகிழ்ந்தனர். சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் அங்குள்ள மீன் கடைகள்,ஓட்டல்களில் வியாபாரம் களை கட்டியது. நாமக்கல் கொல்லிமலைக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் அங்குள்ள நம் அருவி, மாசிலா அருவி, மெயின் அருவிகளில் உற்சாகத்துடன் குளித்தனர். தாவரவியல் பூங்கா, வாசலூர்பட்டி படகு இல்லம், அறப்பளீஸ்வரர் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று பார்வையிட்டனர். இடைப்பாடி மாவட்டம் பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள், காவிரி ஆற்றில் விசைப்படகில் சென்று மகிழ்ந்ததுடன் பொறித்த மீன்களை வாங்கி ருசித்தனர்.