மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்கள்: அக்.2 வரை விண்ணப்பிக்க கால அவகாசம்
* எழுத்து தேர்வு நவம்பர் 16ம் தேதி நடக்கிறது
சென்னை: மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு நவம்பர் 16ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் லிமிடெட்டில் காலியாக உள்ள 1794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு(தொழிற்பயிற்சி கிரேடு 2) உள்ள பதவிக்கான நேரடியாக நியமிக்கப்படுகின்றனர். இப்பதவிகளுக்கு வரும் அக்டோபர் 2ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை இணையவழியாக( www.tnpscexams.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தங்களை அக்டோபர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மேற்கொள்ளலாம்.
தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும் யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம். இப்பதவிக்கான எழுத்து தேர்வு நவம்பர் 16ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு நடக்கிறது. தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு(தொழிற்பிரிவு: மின் பணியாளர் மற்றும் கம்பியாள் பாடம்) நடக்கிறது. தாள் 1ல் தமிழ் தகுதி தேர்வில் 100 வினாக்களும், பகுதி ‘‘ஆ”வில் பொது அறிவு(10ம் வகுப்பு தரம்) 75 வினாக்களுக்கும், பகுதி ‘‘இ” திறனறிவு மற்றம் மனக்கணக்கு நுண்ணறிவு தேர்வில் 25 வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இரண்டாம் தாள் தேர்வில்(தொழிற்பயிற்சி) 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இத்தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் எழுத்து தேர்விற்கு 2 மாவட்டங்களை தேர்வு செய்யலாம். தேந்தெடுக்கப்பட்ட இரு மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றில் உள்ள தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் 1.7.2025 அன்று 18 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இனவாரியான உச்சவரம்பு மற்றும் வயது வரம்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய குழுமத்தினால் வழங்கப்படும் ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் தேசிய தொழிற்சான்றிதழ், தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மின் பணியாளர் அல்லது கம்பியாள் அல்லது சிறப்பு திட்டத்தின் கீழ் மின்னியல் தொழிற்பிரிவு படித்திருக்க வேண்டும். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.18,800 - ரூ.59,900 என்ற அளவில் வழங்கப்படும். தேர்வுக்கான முழு விவரங்களை www.tnpscexams.in) தெரிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.