645 காலி பணியிடங்களுக்கு குரூப் 2,2ஏ தேர்வு; இளங்கலை, முதுநிலை பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பம்: ஆக.13ம் தேதி வரை கால அவகாசம்
குரூப் 2ஏ பதவியில் பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டு துறை முதுநிலை ஆய்வாளர் 65 இடம், இந்து சமய அறநிலையத்துறையில் தணிக்கை ஆய்வாளர் 11, வணிக வரித்துறையில் உதவியாளர் 13, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் 40, உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் உதவியாளர் 12, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறையில் உதவியாளர் 43, காவல் துறையில் உதவியாளர் 41, மருத்துவம் மற்றும் ஊரக நல சேவைகள் துறையில் உதவியாளர் 74, தொழிலாளர் துறை உதவியாளர் 33, பள்ளிக்கல்வித்துறையில் உதவியாளர் 109 என 31 துறையில் 595 இடங்கள் நிரப்பப்படுகிறது. குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளில் மொத்தம் 645 இடங்கள் நிரப்பப்படுகிறது.
குரூப் 2, 2ஏ தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்ட அன்றே இணையதளம் www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் ஏதாவது இளங்கலை படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இத்தேர்வுக்கு இளங்கலை பட்டதாரிகள் மட்டுமின்றி, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினியர் என்று போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 13ம் தேதி கடைசி நாள். இதனால், லட்சக்கணக்கானோர் தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். இந்த தேர்வுக்கும் பல லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தக்கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும். அதுவும் குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.