உத்தரப்பிரதேசத்தில் மதமாற்ற தடை சட்டத்தில் பதிவான எப்ஐஆர்கள் ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் இந்துக்கள் பலர் கிறிஸ்தவ மாதத்திற்கு மதமாற்றம் செய்யப்படுவதாக இந்து அமைப்புகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கடந்த 2021 டிசம்பர் முதல் 2023 ஜனவரி வரையிலும் 5 எப்ஐஆர் பதிவு செய்தனர். இந்த வழக்கு பதிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் 5 எப்ஐஆர்களையும் ரத்து செய்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: குற்றவியல் சட்டங்கள் அப்பாவி மக்களை துன்புறுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. கட்டாய மதமாற்ற தடை சட்டத்தின் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர்களில் சட்ட குறைபாடுகள், நடைமுறை குறைபாடுகள் உள்ளன. நம்பகமான ஆதாரங்களும் இல்லை.
மத நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது, தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவை கட்டாய மதமாற்ற தடை சட்டம் அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச் செயலாக கருதப்படாது. மதம் மாறியதாக கூறப்படும் யாரும் காவல் துறையிடம் புகார் அளிக்கவில்லை. 2024ம் ஆண்டில் தான் எந்தவொரு நபரும் மதமாற்றத்திற்கு எதிராக புகார் அளிக்கலாம் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த வழக்குகள் அதற்கு முன்பே பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே 5 எப்ஐஆர்களையும் ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர்.