உத்தர பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு
லக்னோ: உத்தர பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். பாறைகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்த தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
சோன்பத்ராவின் டலா பகுதியில் உள்ள மலைச் சரிவில் இருந்து ஒரு பெரிய பாறை திடீரென உடைந்து, கீழே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த விபத்து நடந்தபோது சுமார் 15 தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், உடனடியாக அவர்களால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கிய ஒரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது
குவாரி தளத்தில் தொழிலாளர்கள் கம்ப்ரஷன் இயந்திரங்களைப் பயன்படுத்தி பாறையில் துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேலிருந்த பாறையின் பெரிய பகுதி திடீரென விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும்விரைந்துள்ளனர்.