உத்தரகாசி காட்டாற்று வெள்ளம்; 10 ராணுவ வீரர்களின் கதி என்ன?.. மீட்புப் பணியில் ராணுவம், பேரிடர் மீட்புப் படை
உத்தராகண்ட்: உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரகாசி அருகே உள்ள தாரல்லி, சுஹி டாப், ஹர்சில் ஆகிய 3 இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில், சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியை 150-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மேற்கொண்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அங்கு விரைந்துள்ளனர். வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாரல்லியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில் 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காட்டாற்று வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், 25 தங்கும் விடுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தாரல்லி என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் முகாமில் இருந்தபோது காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் காணாமல் போன ராணுவ அதிகாரி, 10 ராணுவ வீரர்களை மீட்புப் படை தேடி வருகிறது. கட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ராணுவ அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.