உத்தரகாண்ட் வௌ்ளத்தில் சிக்கி தவித்த 150 பேர் மீட்பு: மீட்பு பணிகள் தீவிரம்
உத்தரகாசி: இமயமலை தொடரில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் நேற்று முன்தினம் திடீரென மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டி தீர்த்ததில், ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கை ஆற்றில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது. சேறும், சகதியுமாக பாய்ந்து வந்த காட்டாற்று வௌ்ளம் தாராலி கிராமத்தை சூறையாடியது. அங்குள்ள வீடுகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளும், மரங்கள், வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன. வௌ்ள நீருடன் சேறும் கலந்து வந்ததால் தாராலி கிராமமே மூழ்கியது. தாராலி கிராமம் முழுவதும் மண்ணில் புதையுண்டதில் ஏராளமானோர் மாயமாகினர். உள்ளூர் காவல்துறை, மாநில, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்டோர் மாயமானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கி தவித்த 150 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான ராணுவ வீரர்கள் 11 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணை ஆணையர் மொஹ்சன் ஷாகேடி செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய அவசரகால படையின் மூன்று குழுக்கள் தாராலி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தன. ஆனால் நிலச்சரிவு காரணமாக ரிஷிகேஷ் உத்தரகாசி நெடுஞ்சாலை மூடப்பட்டதால் பணிகள் தடைப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக டேராடூனில் இருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விமானம் மூலம் செல்வதும் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு கிடைத்த தகவல்களின்படி, ராணுவம், ஐடிபிபி, எஸ்டிஆர்எப் குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதுவரை 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 4 பேர் பலியாகி விட்டனர். 50 பேர் காணாமல போயுள்ளனர்” என தெரிவித்தார்.
* கேரளாவை சேர்ந்த 28 பேர் மாயம்
இதனிடையே உத்தரகாசிக்கு சென்ற கேரளாவை சேர்ந்த 28 பேர் மாயமாகி விட்டதாக தகவல் வௌியாகி உள்ளது. இதுகுறித்து ஒருவர் கூறுகையில். “கேரளாவில் இருந்து 28 பேர் உத்தரகாசி சென்றனர். நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரிக்கு புறப்பட்ட அவர்களை, காட்டாற்று வௌ்ள பாதிப்புக்கு பிறகு தொடர்பு கொள்ள முடியாததால், அவர்களின் நிலை பற்றி கவலை எழுந்துள்ளது” என்றார்.