35 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றிணைந்து உத்தரகாசி சென்ற நண்பர்கள்: புனேவில் இருந்து சென்ற 24 நண்பர்கள் பத்திரமாக உள்ளதாக தகவல்
உத்தராகண்ட்: மகாராஷ்டிராவில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்து நண்பர்கள் உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காணவில்லை.
அவர்களை தேடும் பணியில் ராணுவம் தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. கல்போத்திரி பகுதியில் சிக்கி இருந்த 200க்கு மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ளப்பெருக்கில் தாராலி என்ற கிராமமே உருக்குலைந்த செயற்கைக்கோள் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக 10ஆம் வகுப்பு படித்த நண்பர்கள் 24 பேர் உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
பல ஆண்டுகளுக்கு பின் சந்தித்த அவர்கள் உத்தரகாசிக்கு சுற்றுலா சென்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், அவர்களின் நிலை தெரியாமல் உறவினர்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் ஆதித்யபோர் என்பவர், தனது தந்தை அசோக்போருக்கு வீடியோ கால் செய்து பேசியதாகவும், 24 பேரும் பத்திரமாக இருப்பதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளார். அவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் என உறவினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.