உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நேற்றைய தினம் பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து கொண்டு அங்கிருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்ற பிரதமர் இன்று பனாரஸ் ரயில் நிலையத்திலிருந்து 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பனாரஸ் -கஜூராவி வழித்தடம், லக்னோ -சஹாரன்பூர், ஃபிரோஸ்பூர் - டெல்லி இடையிலும் தென்னிந்தியாவின் எர்ணாகுளம்- பெங்களூரு இடையிலான 4 வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
தென்னிந்தியாவை பொறுத்தவரை எர்ணாகுளம்- பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையின் மூலம் பயண நேரம் சுமார் 2 மணி நேரம் வரை குறைகிறது. எர்ணாகுளத்திலிருந்து தமிழகம் வழியாக பெங்களூரு செல்லகூடிய வந்தே பாரத் ரயில் சுமார் 8 மணி நேரம் 40 நிமிடங்களில் பயணத்தை நிறைவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ரயில் சேவை மூலம் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று துவங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை மூலம் பயணிகளின் பயண நேரம் குறைவதோடு பிராந்திய போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தவும், சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை நாடு முழுவதும் ஊக்குவிப்பதற்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. எர்ணாகுளத்திலிருந்து தமிழகம் வழியாக பெங்களூரு செல்லகூடிய வந்தே பாரத் ரயில் சேவையை தவிர பனாரஸ் -கஜூராவி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
தற்போது செயல்பாட்டில் உள்ள சிறப்பு ரயில்களோடு ஒப்பிடுகையில் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை பயண நேரத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய வந்தே பாரத் ரயில் நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வாரணாசி, பிரயாஜ்ராத், சித்திரப்பூர் மற்றும் கஜூராவி உள்ளிட்ட மதம் மற்றும் கலாச்சார தலங்களை இணைக்கும் வகையில் இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையை துவங்கி வைத்து பிரதமர் மோடி அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.