உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை இருக்கு... மின்விளக்கு இல்லை...
*நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
உத்தமபாளையம் : உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைத்தும் போதுமான அளவு மின்விளக்குகள் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
உத்தமபாளையம் நகரில் ஞானம்மன் திருக்கோவில் செல்லும் சாலையின் வளைவில் இரண்டு முறை விபத்துக்கள் நடந்தன. குறிப்பாக சாலையை மீறி பக்கத்தில் உள்ள கடைகளுக்குள் லாரி ஒன்றும், அரசு பஸ் ஒன்றும் புகுந்ததில் இரண்டு பேர் பலியானார்கள். இதில், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உத்தமபாளையம் பேருந்து நிலையம் செல்லும் வளைவில் இந்தச் சம்பவம் நடந்ததால் இங்கு பேரிக்காட் அமைத்தும் வேகத்தடை அமைத்தும் வானங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கும், உள்ளாட்சித் துறைக்கும் கோரிக்கை வைத்தனர். இந்த வளைவில் மாநில நெடுஞ்சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்தது. குறிப்பாக சாலையின் இரண்டு புறமும் மின்விளக்குகள் அதிக அளவில் இல்லை.
இரவு நேரங்களில் பயணம் செய்யவே முடியாத நிலையிலும் இச்சாலை உள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வந்தனர். இதனையடுத்து கடந்த வாரத்தில் விபத்துகளை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலையின் வளைவில் வேகத்தடை, தடுப்பு பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் வேகத்தடை அமைக்கப்பட்ட இடத்திலும் பேரிகார்டு அமைக்கப்பட்ட இடத்திலும் போதிய லைட் வெளிச்சம் இல்லை.
இதனால் எதிரில் இரவு நேரங்களில் வரக்கூடிய கனரக வாகனங்கள், டூவீலர்கள், கார்கள், சாலைகளில் நடந்து செல்வோர் என அனைவருமே விபத்தில் சிக்கி கொள்கின்றனர். காரணம் சாலைகளில் அமைக்கப்பட்ட வேகத்தடையும் வண்ணங்கள் ஏதுவும் பூசப்படவில்லை பேரிகார்டுகளில் ஒளிரும் விளக்குகள் பதிக்கப்படவில்லை. இதனால் வாகனம் ஓட்டுபவர்கள் கீழே விழுந்து கடந்த 10 நாட்களில் 20 விபத்துக்கள் நடந்துள்ளன.
மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை அமைத்துவிட்டு அதில் வெள்ளை வண்ணம் பூசாமல் சென்று விட்டனர். இதேபோல் பேரிகார்டுகளில் ஒளிரும் சிகப்பு விளக்குகளை ஒட்டப்படவில்லை.
இதனால் தினமும் டூவீலரில் வருவோர் கீழே விழுந்து செல்லும் நிலை தொடர்கிறது. சாலைகளில் பெயிண்ட் அடிக்காததால், இதுபோன்ற விபத்துக்கள் நடக்கிறது. எனவே விபத்து தடுப்பு நடவடிக்கைகளில் மாநில நெடுஞ்சாலைத்துறை காவல்துறையினர் இணைந்து பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எங்கெங்கு பேரிகார்டுகள் அமைத்தாலும் அங்கு ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும்.
இதே போல் சாலைகளில் வண்ணம் பூசப்பட வேண்டும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் சாலைகளின் இரண்டு புறமும் மின்விளக்குகளை அமைத்தால் தான் விபத்துகள் நடக்காது. மிக முக்கியமான இந்த வளைவில், பேரிகார்டு அமைத்தல், வேகத்தடை அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெரு விளக்கு, ஒளிரும் சிவப்பு விளக்கு வசதிகள் செய்து கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே விபத்து தடுத்திட முடியும். தற்போது மிக மோசமாக சேதமடைந்துள்ள சாலைகள் அனைத்தையும் சரி செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.