உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாமல் திண்டாடும் நோயாளிகள்
*புதிய விபத்து அவசர சிகிச்சை மையம் திறப்பு எப்போது?
உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் செயல்படும் தாலுகா அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் திண்டாடுகின்றனர்.உத்தமபாளையம் அரசு தாலுகா மருத்துவமனை 100 ஆண்டுகள் பழமையானதாக உள்ளது. இங்கு 12 டாக்டர்கள் வரை பணிபுரிந்த காலங்கள் உண்டு. இதற்கு மிக காரணம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, தாலுகா அந்தஸ்தை உடையதாக உள்ளது.
தற்போதும் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், கோகிலாபுரம், ஆனைமலையான்பட்டி, ராயப்பன்பட்டி, அனுமந்தன்பட்டி, கோவிந்தன்பட்டி, புதுப்பட்டி, உ.அம்மாபட்டி ஆகிய சுற்று வட்டார பகுதிகளுக்கு தலைமை மருத்துவமனையாக செயல்படுகிறது. மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
தற்போது பனிக்காலம் என்பதால், புதுப்புது வைரஸ் தொற்றுகள் பரவி வருகிறது. இதேபோல், நெஞ்சுவலி, சர்க்கரை, ரத்த அழுத்தம், மூச்சிரைப்பு, பிரசவம் என வெளி நோயாளிகள் அதிகம் வருகின்றனர். உள் நோயாளிகளின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது 8 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்.
ஆனால் இம் மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் தான் இருக்கின்றனர். கூடுதலாக மருத்துவமனையில் பணிபுரியும் 2 பேரை தற்காலிக மருத்துவர்களாக (டெபுடேசன்) பணி செய்ய அனுப்பி வருகின்றனர். இதனால் தினமும் 500க்கும் மேல் நோயாளர்கள் காலை நேரத்தில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. நிரந்தர மருத்துவர்கள் பணியிடம் 4 பேர் வரை நியமிக்கப்படவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியும் நடவடிக்கை இல்லை.
மேலும் உடனடியாக மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிரந்தரமாக நியமிக்கப்பட்ட டாக்டர்களையும் நியமித்து உத்தமபாளையம் தாலுகா தலைமை மருத்துவமனை செயல்பட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனை நூற்றாண்டு பழமை வாய்ந்ததாக இருந்தாலும் மருத்துவமனையை தேனி மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலை தொடர்கிறது. டாக்டர்களே இல்லாமல் இருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. காரணம் அதிகமான கிளினிக் இல்லாத ஒரே ஊர் உத்தமபாளையம். இதேபோல் அவசர சிகிச்சைக்கு என தாய் வார்டு கட்டப்பட்டு திறக்கப்படவில்லை. தனியார் மருத்துவமனைகள் எதுவும் இந்த ஊரில் இல்லை.
இரவு நேரங்களில் திடீரென நெஞ்சுவலி என சிகிச்சைக்கு வந்தால் இங்கு டாக்டர்கள் இல்லாத நிலையில் கடந்த 3 மாதமாக உயிர் இழப்புகள் தொடர்கின்றன. இதேபோல் உயர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதிகமாக நோயாளிகளை அனுப்பும் ஒரே மருத்துவமனை உத்தமபாளையம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு எதற்கு இந்த அவலம் என பொதுமக்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
இதை போல் பிரசவங்கள் எதுவும் நடப்பதில்லை. காலை நேரத்திலேயே நோயாளிகள் காய்ச்சல், சளி என வந்தால் கூட டாக்டர்கள் இல்லாத நிலையில் திண்டாடுகின்றனர். உடனடியாக தேனி மாவட்ட நிர்வாகம் டாக்டர்கள் நியமனத்தில் தாமதம் காட்டாமல் டெபுடேசன் அடிப்படையில் ஐந்து டாக்டர்களையாவது தற்காலிகமாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாய் வார்டு (விபத்து அவசர சிகிச்சை) பிரிவிற்கு என ஸ்கேன் மையம், நவீன எக்ஸ்ரே பிரிவு, 24 மணி நேர லேப் மற்றும் தனியாக 5 டாக்டர்களை நிபமித்து திறக்கப்பட வேண்டும்.