உத்தமபாளையம் பகுதியில் நெற்பயிரில் புகையான் தாக்குதல்
*தடுக்க வேளாண் துறையினர் ஆலோசனை
உத்தமபாளையம் : உத்தமபாளையம் பகுதிகளில், நெற்பயிர்களில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, ஆனைமலையன் பட்டி, ராமசாமி நாயக்கன்பட்டி,உள்ளிட்ட இடங்களில் தற்போது குறுவை நெல் சாகுபடி சுமார் 500 ஹெக்டேர் நிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போதைய பருவநிலை மாற்றத்தின் காரணமாக நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாக தண்டுப்பகுதியில் பூச்சி தாக்கினால் இதன் சாறு உறிஞ்சப்பட்டு விளைச்சல் குறைந்தால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. பயிர் வட்ட வட்டமாக காய்ந்து விடும்.இதனை தடுப்பது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது: வயலில் உள்ள தண்ணீரை வடித்து விட வேண்டும். பூச்சி தாக்குதல் உள்ள வயலில் காற்றோட்டம் ஏற்படுத்தி ஒதுக்கி விட வேண்டும்.
இதே போல் பூச்சி மருந்தாக, டினோட்டி பியூரான் 20 சதவீதம் 50 கிராம் ஏக்கருக்கும், தயோ மீத்தாக்சம் 25 சதவீதம் 200 கிராம் ஏக்கருக்கும், பிப்ரோனில் 5 சதவீதம் 20 கிராம் ஏக்கருக்கும் அசிடேட் பிப்ரோபிசின் 350 கிராம் ஏக்கருக்கும் பயன்படுத்தலாம். இது குறித்து விபரம் அறிய உத்தமபாளையம் வேளாண்மை துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.