ஊத்துக்கோட்டையில் ரூ.32 கோடியில் பணிகள் வாகனங்களை அகற்றாமல் தார்சாலை அமைப்பு
ஊத்துக்கோட்டை, செப்.28: ஊத்துக்கோட்டை பகுதியில் வாகனங்களை அகற்றாமல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அலட்சியமாக போடப்பட்ட சாலையால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஜனப்பன்சத்திரம் முதல் பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டை வரை தார்சாலை போடப்பட்டது. இந்த சாலையில் சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி, திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டா, கர்னூல் ஆகிய பகுதிகளுக்கும், இதேபோல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கும் கார், பஸ், வேன், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகிறது.
இதனால், இந்தசாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக மாறியது. மேலும், ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருவதால், ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், தண்டலம், பெரியபாளையம், கன்னிகைப்பேர், ஜெயபுரம், வடமதுரை கூட்டு சாலை, மஞ்சங்காரணை என ஆங்காங்கே சேதம் அடைந்து பெரியளவில் மரண பள்ளங்கள் ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் சாலை விரிசல் ஏற்பட்டு பெயர்ந்தது. இதனால், இரவு நேரத்தில் பைக்கில் செல்பவர்கள் கவனிக்காமல் சாலை பள்ளத்தில் விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே, தரமான சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து, தினகரன் நாளிதழில் கடந்த ஆண்டு டிசம்பர், ஜனவரி மாதம் படத்துடன் செய்தி வெளியானது.
அதன்படி, ஜனப்பன் சத்திரம் முதல் ஊத்துக்கோட்டை வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.32 கோடி செலவில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், ஜனப்பன்சத்திரம் முதல் ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் வரை சாலை போடப்பட்டது. மேலும், ஊத்துக்கோட்டை நேரு பஜார், நாகலாபுரம் சாலை, போக்குவரத்து சோதனைச்சாவடி வரை பழைய சாலை கொத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த சாலை பணிகள் தொடங்கப்பட்டது. இதில், அண்ணாசிலை முதல் செக்போஸ்ட் வரையிலும், பஸ் பணிமனை எதிரிலும், செக்போஸ்ட் அருகிலும் வலதுபுறம் மட்டும் சாலை போட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் சாலை ஓரத்தில் நின்றிருந்த கார்களை அகற்றாமல், கார் நின்ற இடத்தை விட்டுவிட்டு சாலையை வளைந்து வளைந்து போட்டுள்ளனர். இதனை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரத்தில் சாலை போடுவதால்தான் இவ்வாறு நிகழ்வதாக கிண்டலுடன் கூறிச் செல்கின்றனர்.