யுஎஸ் ஓபன் டென்னிஸ்: சளைக்காத பலென்கா: காலிறுதிக்கு முன்னேற்றம்
நியூயார்க்: யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் போட்டியில், பெலாரஸ் வீராங்கனை அரீனா சபலென்கா அபார வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி நடக்கிறது. இதில் நேற்று, காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்று ஆட்டங்கள் தொடங்கின. மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பெலாரசின் அரீனா சபலனெ்கா (27 வயது, 1வது ரேங்க்), ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சா (27 வயது, 95வது ரேங்க்) விளையாடினர். அதில் சபலென்கா ஒரு மணி 13 நிமிடங்களில் 6-1, 6-4 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனைகள் ஜெசிகா பெகுலா (31 வயது, 4வது ரேங்க்), ஆன் லீ (25 வயது, 58வது ரேங்க்) சந்தித்தனர். வெறும் 54 நிமிடங்களில் பெகுலா 6-1, 6-2 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று காலிறுதியை உறுதி செய்தார். மற்றாரு ஆட்டத்தில் செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவா (29 வயது, 62வது ரேங்க்), அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் (29 வயது, 139வது ரேங்க்) களம் கண்டனர். முதல் செட்டை டெய்லர் 6-1 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார்.
ஆனால் டை பிரேக்கர் வரை நீண்ட 2வது செட் முடிய கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கும் அதிகமானது. அதை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினாலும் பார்போரா 7-6 (15-13) என்ற செட்களில் வசப்படுத்தினார். தொடர்ந்து 3வது செட்டையும் பார்பரா 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதனால் 3 மணி 4 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் பார்பரோ 2-1 என்ற செட்களில் வென்று காலிறுதியை உறுதி செய்தார்.
ஓஹோ... ஜோகோவிச் ஸ்ட்ரஃபை வீழ்த்தி அபாரம்;
யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியன் நோவக் ஜோகோவிச் (38 வயது, 7வது ரேங்க்), ஜெர்மனியின் ஜேன் லென்னார்ட் ஸ்ட்ரஃப் (35 வயது, 144வது ரேங்க்) களம் கண்டனர். அபாரமாக ஆடிய ஜோகோவிச் ஒரு மணி 49 நிமிடங்களில் 6-3, 6-3, 6-2 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று 14வது முறையாக யுஎஸ் ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார். அதேபோல் கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), டெய்லர் ஃபிரிட்ஸ் (அமெரிக்கா), முதல் முறையாக ஜிரி லெஹக்கா (செக் குடியரசு) ஆகியோர் காலிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.