ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்; ஒற்றையரில் பட்டம் வெல்பவருக்கு ரூ.43 கோடி பரிசு
நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நாளை துவங்கவுள்ளது. இதில் முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனும், நம்பர் 1 வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர் (முதல் போட்டியில்) செக் குடியரசு வீரர் விட் கோப்ரிவா உடன் மோத உள்ளார். 2வது ரேங்க் வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்காவுடன் மோதுகிறார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் தனது முதல் போட்டியில், சிலியின் அலெஜாண்ட்ரோ அல்வரெசை எதிர்கொள்கிறார். அமெரிக்காவின் டெய்லர் ப்ரிட்ஸ், டாம்மி பால், நார்வேவின் கேஸ்பர் ரூட், ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ் உள்ளிட்டோரும் முதல் நாளில் களம் இறங்குகின்றனர். 4 முறை யுஎஸ் ஓபன் உள்பட மொத்தம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செர்பியாவின் 38 வயதான ஜோகோவிச், முதல் சுற்றில் அமெரிக்காவின் லர்னர் டியெனை எதிர்கொள்கிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான பெலாரசின் அரினா சபலென்கா முதல் சுற்றில் நாளை சுவிட்சர்லாந்து வீராங்கனை ரெபேக்கா மாஸரோவாவுடன் மோதவுள்ளார். 2ம் ரேங்க் போலந்தின் இகாஸ்வியாடெக், கொலம்பியா வீராங்கனை எமிலியானா ரெஸ்ட்ரெபோவை எதிர்கொள்கிறார். அமெரிக்காவின் கோகோ கோப், ஜெசிகா பெகுலா, மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, மார்தா கோஸ்ட்யுக், ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷ்யாவின் இளம்புயல் மிர்ரா ஆண்ட்ரீவா, இங்கிலாந்தின் எம்மா ராடுகானு ஆகியோரும் முதல் நாளில் களம் காண்கின்றனர். நாளை தொடங்கி செப். 7ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.789 கோடியாகும். இதில் ஆடவர், மகளிர் ஒற்றையரில் சாம்பியன் படம் வெல்பவருக்கு 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளுடன் ரூ.43 கோடி பரிசுத்தொகை கிடைக்கும். ரன்னருக்கு ரூ.21.5 கோடி வழங்கப்படும். போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 7 மணி வரை நடைபெறும். இந்த போட்டிகளை ஸ்டார் போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.