அமெரிக்க அரசின் 40 நாள் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் முதல் வெற்றி: செனட் அவையில் திடீர் திருப்பம்
வாஷிங்டன்: அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்க தேவையான நிதிக்கு பட்ஜெட் தயாரித்து அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். இந்த முறை, சுகாதார திட்டத்திற்கான மானியத்தை தொடர முடியாது என அதிபர் டிரம்பின் ஆளும் குடியரசு கட்சி திட்டவட்டமாக தெரிவித்தது. இதன் காரணமாக செலவின மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஒப்புதல் தரவில்லை. இந்த கருத்து வேறுபாடு காரணமாக, செலவின மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல், அமெரிக்க அரசு நிர்வாகம் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் 40 நாட்களாக முடங்கியிருக்கிறது. செலவின மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அரசு பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியும், அரசின் திட்டங்களுக்கு நிதி வழங்க முடியும்.
இது எதுவும் கடந்த 40 நாட்களாக நடக்காமல் அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியிருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் இதுவே அரசின் நீண்ட கால நிதி முடக்கமாக இருக்கிறது.இந்நிலையில், அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் முதல் படியாக செனட் அவையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சுகாதார பாதுகாப்பு மானியங்கள் உத்தரவாத நீட்டிப்பு இல்லாமல், அரசுக்கு நிதியளிப்பதற்கான சமரச சட்டத்தை நிறைவேற்றுவதற்கும், ஜனவரி 1ம் தேதி காலாவதியாகும் மலிவு பராமரிப்பு சட்ட வரிச் சலுகைகளை நீட்டிப்பது குறித்து பின்னர் வாக்கெடுப்பு நடத்துவதற்கும் செனட் அவையில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சில மிதவாத ஜனநாயக கட்சியினர் ஆதரவாக வாக்களித்தனர். இதனால் 60-40 என்ற வாக்கில் தீர்மானம் நிறைவேறியது.இதன் மூலம் அரசுக்கான நிதி ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது அரசின் முடக்கத்தை தற்காலிகமாக தீர்த்து வைக்கும். அதே சமயம் டிசம்பர் இறுதியில் நடக்கும் இறுதி வாக்கெடுப்பில் ஜனநாயக கட்சியினர் ஒப்புக் கொள்ளாதபட்சத்தில் மீண்டும் அரசு நிர்வாகம் முடங்கும்.