பயனுள்ள இணையதளங்கள்
இன்று நாம் அன்றாட தேவைகளில் பலவற்றுக்கும் இணையதள சேவையை தொன்ணூறு சதவீதம் பயன்படுத்துகிறோம். உணவு முதல் உடை வரை ஆன்லைன் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் இணையதள சேவைகளும் நிறையவே உள்ளன. அப்படி மாணவர்களின் உயர்கல்விக்கும், பொது அறிவு மேம்பாட்டுக்கும் உதவும் சில இணையதள சேவைகளை இங்கே பார்ப்போம்…
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணையதளம் (https://agritech.tnau.ac.in )
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் 1971ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. வேளாண்மைத்துறை முன்னேற்றத்தில் இப்பல்கலைக்கழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையின் முன்னேற்றத்திற்குத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முழுமுதற் பொறுப்பு என்றால் மிகையாகாது. இப்பல்கலைக்கழகம் வேளாண் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க சேவைகள் போன்றவைகளை வழங்குகிறது. வேளாண் கல்வியில் இளங்கலைப் பட்டப்படிப்புகளாக B.Sc. (Hons.) Agriculture,B.Sc. (Hons.) Horticulture, B.Sc. (Hons.) Agri Business Management, B.Sc. (Hons.) Forestry,B.Sc. (Hons.) Sericulture, B.Sc. (Hons.) Food, Nutrition and Dietetics, B.Tech. (Agricultural Engineering), B.Tech. (Energy and Environmental Engineering), B.Tech. (Food Technology), B.Tech. (Agricultural Information Technology), B.Tech. (Biotechnology), B.Tech. (Bioinformatics) ஆகியவற்றை வழங்குகிறது. முதுகலைப் பட்டப்படிப்புகளாக M.Sc. (Ag.) - Agricultural Economics, Agricultural Extension Education, Agri-Business Management, Agronomy , Plant Physiology, Agriculture Meteorology, Soil Science, Microbiology,Nano Science & Technology உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. அதோடு இல்லாமல் ஆயிரக்கணக்கான உழவர்களுக்கு மற்றும் விரிவாக்கத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பண்ணைத் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தொழில்முனைவோர் முன்னேற்றத்திற்குத் திறமையான பயிற்சி மற்றும் பயனீட்டாளர்களுக்கு சேவையும் தருகிறது. அரசிடமிருந்தும் பல திட்டங்களை பெற்று திறம்பட செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிவியல் சார்ந்த முன்னேற்றத்திற்கும் மற்றும் உழவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்ததுவதற்கு ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.
பொதுநூலக இயக்ககம் www.tamilnadupubliclibraries.org
தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948-இன் படி, தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. பொது நூலகங்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 1972ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. பொது நூலக இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் கன்னிமாரா பொது நூலகம்-1, அண்ணா நூற்றாண்டு நூலகம்-1, கலைஞர் நூற்றாண்டு நூலகம்-1, மாவட்ட மைய நூலகங்கள்-32, முழு நேரக் கிளை நூலகங்கள்-314, கிளை நூலகங்கள்-1612, நடமாடும் நூலகங்கள்- 14, ஊர்ப்புற நூலகங்கள்-1915, பகுதி நேர நூலகங்கள்-771 என மொத்தம் 4,661 நூலகங்கள் செயல்படுகின்றன. இவை தவிர, மக்களின் பயன்பாட்டிற்காக மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் ஆகிய இடங்களில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் பொதுநூலக இயக்ககத்தால் உருவாக்கப்பட்டுள்ள வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் இணையதளம், தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்களுடன் பதிப்பாளர்கள் / விநியோகஸ்தர்களை இணைப்பதன் மூலமும், புத்தக சமர்ப்பிப்புகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், புத்தகங்களின் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதன் மூலமும், பொது நூலகங்களுக்கான நூல் கொள்முதல் செயல்முறையில் புரட்சியை ஏற்படுத்துகிறது. இந்த இணையதளமானது, புத்தகங்களைத் தேர்வு செய்யும் நடைமுறையில், துறைசார் நிபுணர்களின் மதிப்புரைகள், நூலகர்கள் மற்றும் வாசகர்களின் மதிப்புரைகள் மற்றும் நூலகங்களிலுள்ள வாசகர் வட்டங்களின் பரிந்துரைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
நூலகங்களில் மக்கள் விரும்பும் புத்தகங்கள் கிடைப்பதையும், வாசிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதையும், இலக்கிய சமூகத்தை ஆதரிப்பதையும் இந்த முயற்சி உறுதி செய்கிறது. தெளிவான விதிகள் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு மூலம், நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலை பன்முகப்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை இந்த இணையதளம் வலுப்படுத்துவதுடன், சமூகத்தின் அறிவுசார் மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை (https://tnschools.gov.in)
பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில் அரசுப் பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல், அவ்வாறு சேர்க்கப்பட்ட குழந்தைகளை இடைநிற்றல் ஏதுமின்றி இடைநிலைக் கல்வி வரை முழுமையாக பள்ளிக் கல்வியைத் தொடரச் செய்தல், குழந்தைகளின் வயதுக்கேற்ற கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல், ஆசிரியர்களுக்கு சிறந்த பயனுள்ள பயிற்சிகளை அளித்து அவர்களின் கற்பித்தல் திறனை வலுப்படுத்துதல், கற்றல் கற்பித்தலின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை எழுத்தறிவையும், எண் திறன்களையும் கற்பித்தல், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், குழந்தைகளுக்கு புதுயுகத் திறன்களை ஊட்டுதல் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் ஆகியவற்றை கோவிட் போன்ற இயல்பல்லாத சூழ்நிலைகளில் உறுதிப்படுத்துதல் ஆகியவை பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில் அரசின் கவனத்திற்குரிய முக்கியமானவையாக அமைகின்றன.
மேலே குறிப்பிட்ட அரசின் பல்வேறு நோக்கங்களை நிறைவேற்றும் பொறுப்புகளை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அமைந்துள்ள பல்வேறு இயக்ககங்கள் மேற்கொண்டு வருகின்றன. தொடக்கக் கல்வி இயக்ககம், பள்ளிக் கல்வி இயக்ககம், மெட்ரிகுலேஷன் பள்ளிக்கல்வி இயக்ககம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, முறைசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் ஆகியவை பள்ளிக் கல்வித் துறையின்கீழ் அமைந்துள்ள இயக்ககங்கள் ஆகும்.
மேலும், இத்துறை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) அரசுத் தேர்வு இயக்ககம், பொது நூலக இயக்ககம், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகிய அமைப்புகளின் உதவியோடு இயங்கி வருகிறது. பள்ளிக் கல்வித்துறையின் இணையதள முகப்பு பக்கத்தில் இயக்குநரகங்கள், சிறப்பு முயற்சிகள், தகவல் உரிமைச் சட்டம் மற்றும் குறை தீர்வு, நம்ம பள்ளிக்கு நன்கொடை, KNOW YOUR EMIS போன்ற பிரிவுகளில் பள்ளிக் கல்வி சார்ந்த தகவல்கள் வழங்கப்பட்டிருக்கும். மேலும் முகப்புப் பக்கத்தில் பள்ளிக் கல்விக்கு தொடர்புள்ள பல்வேறு துறை லிங்குகள் கொடுக்கப்பட்டிருக்கும். பள்ளி மாணவர்கள் இந்த இணையதளப் பக்கத்தை அலசி ஆராய்ந்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும்.