பயனுள்ள இணையதளங்கள்
மெய்நிகர் கற்றல் வலைத்தளம் (tamilnaducareerservices.tn.gov.in)
தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையானது அரசு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு உதவும் நோக்கில் இணைய வழியிலான மெய்நிகர் கற்றல் வலைத்தளம் செயல்பட்டு வருகிறது. அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவ்விணையதளமானது தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி வகுப்புகள் ஆகிய இத்துறை யின் இன்றியமையாத பணிகளின் மற்றுமொரு அங்கமாகத் தொலைநோக்குப் பார்வையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 22.02.2019 அன்று தொடக்கி வைக்கப்பட்ட இவ்விணையதளம் TNPSC (Group I, Group II, Group IV and Group VIIB/VIII) TNUSRPB, UPSC, SSC, AIRFORCE, IBPS, RRB போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகளைக் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த இணைய வழியிலான மெய்நிகர் கற்றல் முறையின் மூலம் மாணவர்கள் எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் மின் வடிவத்தில் கற்கும் சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
தொலைதூரக் கிராமப் பகுதிகளில் வசிக்கும் போட்டித்தேர்வுகளை மேற்கொள்ளும் இளைஞர்களின் தேவை அறிந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அனைத்து மென் பாடக்குறிப்புகளும் இவ்விணையளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மேலும், இம்மென்பாடக்குறிப்புகள் ஆஃப்லைன் முறையிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்விணையதளத்தில், மாணவர்கள் மாதிரி தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுகளை மேற்கொண்டு பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் தினந்தோறும் எடுக்கப்படும் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள இயலாத தொலைதூரத்தில் உள்ள இளைஞர்கள் பயனடையும் வகையில் பயிற்சி வகுப்புகளுக்கான காணொலிப் பாடக்குறிப்புகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதுமட்டுமின்றி இவ்விணையதளத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்படும் விளம்பரப்படுத்தப்பட்ட காலிப்பணியிடங்கள், தேர்வு அறிவிக்கைகள் மற்றும் தொழில் தகவல்கள் ஆகியவை சரியான நேரத்தில் தெரிவிக்கப்படுகின்றன.
செல்போன்கள் உதவியுடன்படிக்கும் பயனர்களின் வசதிக்காக இவ்விணையதளத்தில் செயலியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசுத்துறையில் தனக்கான இடத்தைத் தேடும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களின் கனவை நனவாக்க எவ்வகையிலாவது உதவிபுரிய வேண்டும் என்பதே நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம் (https://www.tnprivatejobs.tn.gov.in)
படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களின் வசதிக்காகத் தனியார் துறை வேலைவாய்ப்பைத் தேடுவோரின் வசதிக்காகப் பல்வேறு வேலையளிப்பவர்கள் பதிவிட்டுள்ள பணிக்காலியிட அறிவிப்புகளை ஆராய்ந்து உங்கள் திறனுக்கும் தேவைக்கும் ஏற்ற வேலைவாய்ப்புகளைப் பெறலாம். உங்களுக்கு ஏற்ற பணியிடங்களை அறிந்துகொண்ட பின், சுயவிவரக்குறிப்பினை உகந்த வேலையளிப்போருக்கு அனுப்பி, நேர்காணலுக்கு ஆயத்தமாகலாம். இந்த இணையதளப் பக்கத்தில் வேலைகள், ஊதியம், அமைவிடம், தற்போதுள்ள காலிப் பணியிடங்கள், பணியிடங்களின் எண்ணிக்கை, தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ள இடங்கள் போன்ற விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வேலைவகையின் அடிப்படையில் தேடுதல், நகரங்களின் அடிப்படையில் தேடுதல் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (https://tncdw.org/pages/view/About-Organisation)
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் தன்னம்பிக்கை மூலம் மகளிரின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் 1983ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களுக்குத் திறன் வளர்ப்புப் பயிற்சிகள் வழங்கி, வலுவான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி, நிதி இணைப்புகளையும் தொழில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி, பெண்களின் ஆற்றல் மேம்பாட்டை அதிகரித்து, சுய உதவிக் குழு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்,நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு. அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அவர்களைத் தலைவராகக்கொண்டு செயல்படுகிறது. ஊரகம் மற்றும் நகர்ப்புற திட்டங்களைச் செயல்படுத்த மேலாண்மை இயக்குநரும், நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் செயல் இயக்குநர், கருப்பொருள் வல்லுநர்களான கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் இதர அலுவலர்களுடன் மாநில அளவில் செயல்படுத்தப்படுகிறது. நிதி உள்ளாக்கம், வேளாண்மை மற்றும் தொழில் நிறுவன மேம்பாடு உள்ளிட்ட கருப்பொருட்களில் ஆலோசனை வழங்க திட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
மாவட்ட அளவில் இணை இயக்குநர் நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சேர்ந்த அலுவலரை திட்ட இயக்குநரை( TNSRLM) தலைமையாகக் கொண்டு மாவட்ட த்திட்ட செயலாக்க அலகு செயல்படுகிறது. உதவித் திட்ட அலுவலர்கள் திட்டக் களப் பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்திவருகின்றனர்.
வட்டார இயக்க மேலாண்மை அலகானது இயக்க மேலாளர் தலைமையின் கீழ் செயல்பட்டுவருகிறது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கப்பட்ட திட்டக் கூறுகளைச் செயல்படுத்தி வருகிறார்கள். நகர்ப்புறங்களில், 3,000 ஏழைக் குடும்பங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு ஒரு சமுதாய ஒருங்கிணைப்பாளர் வாழ்வாதாரத் திட்டத்தினைக் கண்காணித்து செயல்படுத்துவார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (TNULM), தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டம் (DDU-GKY) ஆகிய நான்கு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.