பயனுள்ள இணையதளங்கள்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை www.tnvelaivaaippu.gov.in
1954இல் சிவராவ் குழு அறிக்கையில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக்கொண்டு தற்போதைய தொழில் ஆராய்வு, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை நிலவரத் தகவல் ஆகிய பணிகள் வேலைவாய்ப்புத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இந்த இணையதளம் கனவு காண்…கண்டுபிடி… தீர்வு காண் என்ற வாசகங்களோடு திறக்கும் ஹோம் பேஜில் 6 பிரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் வேலை நாடுநர், வேலை அளிப்பவர், வேலை நிலவரத் தகவல், தொழில்நெறி வழிகாட்டல், தொடர்பு, உள்நுழை என்று கொடுக்கப்பட்டிருக்கும். இந்த இணையதளத்தில் இணைப்பதிவாக தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் (< https://www.tnprivatejobs.tn.gov.in >), வெளிநாட்டில் வேலை பெற உதவும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (< https://omcmanpower.com >), தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (< https://www.tnskill.tn.gov.in/ >), போட்டித்தேர்வு ஆர்வலர்களுக்கான மெய்நிகர் கற்றல் இணையதளம் (), தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இளைஞர்களின் திறனை மேம்படுத்தல் (< https://omcmanpower.com>) ஆகியவற்றின் இணையதள லிங்க்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை www.tnarch.gov.in
தமிழ்நாடு மொழி, பண்பாடு, கலை, வரலாறு அனைத்திலும் சிறப்புடைய ஒரு தொன்மையான மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தின் சிறப்புமிக்க பழமையான பண்பாட்டு வரலாற்றுக் கூறுகளை வெளிப்படுத்தவும், செம்மொழியாம் தமிழின் தொன்மையினை நிலைநிறுத்தவும், எழில்மிகு கோயில்கள், கலைநயமிக்க சிற்பங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், பண்டைய சமுதாயத்தின் பன்முனைக் கோட்பாடுகளை வெளிக்கொணரும் வகையிலும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1961ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயலாற்றி வருகிறது.
தொல்லியல் துறையின் தலைமை அலுவலகம் சென்னையில் தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இங்கு கல்வெட்டுப் பிரிவு, கல்வெட்டுப் பயிற்சி நிறுவனம், நூலகம், நிழற்படப் பிரிவு, அச்சுப் பிரிவு ஆகியன இயங்கிவருகின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளும்போது கிடைக்கும் தொன்மையான கலைப்பொருட்கள் அப்பகுதியிலேயே சேகரிக்கப்படும்.
கலைப்பொருட்களுடன் (வரலாற்றுக் காட்சியகங்கள்) அகழ்வைப்பகங்களில் காட்சிக்காக வைக்கப்படுகின்றன. தொல்லியல் துறையின் கீழ் அரசு கீழ்த்திசை ஓலைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையமும் இயங்கி வருகிறது. இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1869ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு மையத்தில் பல அரிய ஓலைச்சுவடிகளும், புத்தகங்களும் தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, பாலி, உருது, அரபு, பாரசீகம், சிங்களம் ஆகிய மொழிகளிலும், கணிதம், வானவியல், சித்த-ஆயுர் வேத, யுனானி மருத்துவம், வேதம், ஆகமம், கட்டடக்கலை, இசை, சிற்பம், நுண்கலை, வரலாறு, இலக்கணம், இலக்கியம் போன்ற பல துறைகளிலும் உள்ளன. ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டு வரப்படுகின்றன. மேலும் தொல்லியல் சார்ந்த கல்வெட்டியல், அருங்காட்சியகவியல் போன்ற இரண்டு ஆண்டு முதுநிலை பட்டயப்படிப்புகளையும் வழங்கி வருகிறது. மேலும் முழு விவரங்களுக்கு < https://www.tnarch.gov.in > என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் https://tnou.ac.in
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Open University அல்லது TNOU) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநில அரசால் நிறுவப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகமாகும். 2002ஆம் ஆண்டில் தமிழகச் சட்டப்பேரவையில் இயற்றிய சட்டத்தின் கீழ் உயர்கல்வித் தொடரவியலாத, ஆதரவற்றோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், வேலையில் ஈடுபட்டுள்ள ஆண்/பெண்களுக்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காகப் பள்ளிக்கல்வியை தொடராதவர்களுக்கும் பயன்தருமாறு இப்பல்கலைகழகம் நிறுவப்பட்டுள்ளது. பல பாடத்திட்டங்களில் பட்டயச் சான்றிதழ், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பாடத்திட்டங்களை வழங்குகிறது. இது இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் சேருவது எளிதாக ஆக்கப்பட்டிருக்கிறது. தேர்வுகளும் வேண்டியவாறு எடுத்துக்கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் வழங்கப்படும் பணிசார் பாடங்கள் (vocational courses) செய்தொழிலில் அறிவு பெறவும் புதிய வேலை வாய்ப்புகளை வளர்க்கவும் பயனுள்ளதாக உள்ளன. இந்த பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பாடத்திட்டங்கள், அவற்றின் பயன்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் < https://tnou.ac.in > என்ற இணையதளத்தின் மூலம் கண்டு பயன்பெறலாம்.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் https://tnpesu.org
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Physical Education and Sports University) என்பது தமிழ்நாடு அரசால் 2005ஆம் ஆண்டு உடல்கல்வியியல் மற்றும் விளையாட்டுக்கள் துறைகளுக்கென சென்னையில் அமைக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவிலேயே இதுவே விளையாட்டுக் கல்விக்காக அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஆகும். இங்கு ஆசிரியர் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், உடல்நலம் மற்றும் உடல்நல அறிவியல், மேலாண்மை ஆகிய நான்கு பிரிவுகளின் கீழான இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் ஆய்வியல் நிறைஞர், முனைவர், மதிப்புறு முனைவர் போன்ற ஆய்வியல் பட்டப்படிப்புகளையும் வழங்குகிறது. இப்பல்கலைக்கழகத்தின் முழு விவரங்களை அறிய என்ற லிங்க்கை கிளிக் செய்தால் முகப்புப் பக்கத்தில் பல்கலைக்கழகத்தைப் பற்றிய குறிப்புகளை அறியவும், நிர்வாகம், மாணவர் சேர்க்கை, தொலைதூரக் கல்வி என்பது உள்ளிட்டவை கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் விவரம் அறிய https://tnpesu.org என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.