2000 அமெரிக்க டாலர் கேட்டு 50 பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: டெல்லியில் மாணவர், பெற்றோர் பீதி
புதுடெல்லி: டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்த நிலையில், தற்போது மீண்டும் குறிப்பிட்ட குழுவிடம் இருந்து 50 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ம் தேதி, டெல்லி பொதுப் பள்ளி (டிபிஎஸ்), மாடர்ன் கான்வென்ட் மற்றும் ராம் உலகப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகளுக்கு, ‘டெரரைசர்ஸ் 111’ என்ற குழுவிடமிருந்து மின்னஞ்சல் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பள்ளிக் கட்டிடங்களில் குழாய் வெடிகுண்டுகள் மற்றும் மேம்பட்ட வெடிக்கும் கருவிகளைப் பொருத்தியுள்ளதாகவும், தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை ஊடுருவி மாணவர் மற்றும் ஊழியர்களின் தரவுகளைத் திருடிவிட்டதாகவும் அந்தக் குழு கூறியிருந்தது.
72 மணி நேரத்திற்குள் 5,000 அமெரிக்க டாலரை கிரிப்டோகரன்சியாக வழங்காவிட்டால், ெவடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதாக அவர்கள் மிரட்டியிருந்தனர். உடனடியாக பள்ளிகள் காலிசெய்யப்பட்டு, காவல்துறை நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என்பது உறுதியானது. இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே, டெல்லியில் பல்வேறு பகுதியில் உள்ள டிஏவி பொதுப் பள்ளி, ஃபெய்த் அகாடமி, டூன் பொதுப் பள்ளி மற்றும் சர்வோதயா வித்யாலயா உட்பட 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மீண்டும் அதே குழுவிடமிருந்து மின்னஞ்சல் வந்துள்ளது. இந்த முறை, வகுப்பறைகள், அரங்குகள் மற்றும் பள்ளிப் பேருந்துகளில் சக்திவாய்ந்த சி4 ரக வெடிகுண்டுகளைப் பொருத்தியிருப்பதாகக் கூறி, 48 மணி நேரத்திற்குள் 2000 அமெரிக்க டாலரை வழங்கக் கோரியுள்ளனர்.
போலீஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால் உடனடியாக குண்டுகள் வெடிக்கும் என்றும், திருடப்பட்ட தரவுகள் வெளியிடப்படும் என்றும் மிரட்டியுள்ளனர். முந்தைய மிரட்டல்கள் புரளியாக இருந்தாலும், இந்த முறை பாதுகாப்பு அமைப்புகள் இதனை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பள்ளிகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதால், மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பீதி நிலவி வருகிறது.