போராட்டங்களை கட்டுப்படுத்த ராணுவத்தை பயன்படுத்தியது சட்டவிரோதம்: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
லாஸ் ஏஞ்சல்ஸ்: போராட்டங்களைக் கட்டுப்படுத்த ராணுவத்தைப் பயன்படுத்திய அதிபர் டிரம்ப் அரசின் நடவடிக்கையை சட்டவிரோதமானது என அறிவித்து பெடரல் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம், அமெரிக்க அரசின் குடியேற்றத் துறை நடத்திய சோதனைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, அதிபர் டிரம்ப் நிர்வாகம், தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் கடற்படையினரை அங்கு குவித்தது. போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை களமிறக்கியதால், அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த ராணுவப் பயன்பாடு சட்டவிரோதமானது எனக் கூறி, கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசோம் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மூத்த பெடரல் நீதிபதி சார்லஸ் பிரேயர், டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று நேற்று அதிரடித் தீர்ப்பளித்தார். கடந்த 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘போஸ்ஸே கோமிடேடஸ்’ சட்டத்தை டிரம்ப் நிர்வாகம் மீறியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, ‘நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி உள்நாட்டுச் சட்ட அமலாக்கப் பணிகளுக்கு ராணுவத்தைப் பயன்படுத்துவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டங்கள் ஏதும் ஏற்படவில்லை; உள்ளூர் காவல்துறையால் நிலைமையைக் கையாள முடியாத சூழலும் இல்லை’ என்று தனது தீர்ப்பில் தெளிவாகத் தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம், ‘நீதிமன்றத்தின் தீர்ப்பானது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் கிடைத்த வெற்றி. எந்த அதிபரும் மன்னர் அல்ல. தனது சொந்த காவல் படையாக ராணுவத்தை மாற்ற நினைக்கும் டிரம்பின் முயற்சி சட்டவிரோதமானது’ என்று கூறியுள்ளார். ஆனால், இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்துள்ள வெள்ளை மாளிகை, ‘அமெரிக்க நகரங்களை வன்முறையிலிருந்து காக்கும் அதிபரின் அதிகாரத்தை நீதிபதி ஒருவர் பறிக்க முயல்கிறார்’ எனக் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.