அமெரிக்காவின் புதிய தடை அமல் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் அடியோடு சரிகிறது: பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா?
புதுடெல்லி: உக்ரைன் போருக்கு பிறகு தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைத்ததால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வழக்கமாக மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்த்துவிட்டு ரஷ்யாவிடம் கொள்முதல் செய்யத் தொடங்கின. இதன் மூலம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபம் சம்பாதித்தன.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய இறக்குமதி பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்திய அதிபர் டிரம்ப் சமீபத்தில் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகாயிலுக்கு பொருளாதார தடை விதித்தது. இந்த தடை கடந்த 21ம் தேதி முழுமையாக அமலுக்கு வந்த நிலையில், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் அடியோடு சரியும் நிலைக்கு வந்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து சராசரியாக ஒருநாளைக்கு 17 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கப்பட்ட நிலையில், டிசம்பர், ஜனவரி மாதங்களில் இது கிட்டத்தட்ட 4 லட்சமாக பீப்பாய்களாக அடியோடு சரியும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்பிசிஎல் மிட்டல் எனர்ஜி லிமிடெட் மற்றும் மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் தற்போது ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியுள்ளன.
அதே சமயம், ரஷ்யாவின் 2 எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டின் பிற நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் வாங்க முடியும். எனவே ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நின்று விடாது என ஆய்வு நிறுவனங்கள் கூறி உள்ளன. ரஷ்யாவுக்கு பதிலாக மீண்டும் இந்தியா மத்திய கிழக்கு நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும். இது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பதற்கான சூழலை உருவாக்கும்.
* இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதம் இறக்குமதியை மட்டுமே நம்பி உள்ளது.
* கடந்த 21ம் தேதி அமெரிக்க தடை முழுமையாக அமலுக்கு வந்துள்ளதால், கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா தற்போது நிச்சயமற்ற காலகட்டத்தில் நுழைந்துள்ளது.
* ரஷ்யாவிடமிருந்து தினமும் 17 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கி நிலையில் அடுத்த ஓரிரு மாதத்தில் 4 லட்சமாக குறைய உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் கொள்முதல் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.