அமெரிக்க அதிபர் பல முறை முயற்சி டிரம்ப் தொலைபேசி அழைப்பை மோடி ஏற்க மறுத்தது ஏன்? நியூயார்க் டைம்ஸ் பரபரப்பு தகவல்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தொலைபேசி அழைப்பை பிரதமர் மோடி எடுக்க மறுத்தது ஏன் என்பது குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத கூடுதல் வரி விதித்ததால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு சிக்கலாகி உள்ளது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்ததாகவும், ஆனால் மோடி அதை ஏற்கவில்லை என்றும் ஜெர்மன் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.
இதை நியூயார்க் டைம்ஸ் நாளிதழும் உறுதி செய்து உள்ளது. இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததும் பிரதமர் மோடி தன்னை தொடர்பு கொள்வார் என்று டிரம்ப் எதிர்பார்த்து இருந்ததாகவும், ஆனால் மோடி தொடர்பு கொள்ளாததால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப், பல முறை அவரே தொடர்பு கொண்டும் பிரதமர் மோடி அவரது அழைப்பை ஏற்கவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. முதல் காரணம் மே 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூா் தாக்குதல் நடத்திய போது பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள டிரம்ப் அலுவலகம் முயன்றது. ஆனால் யாருடைய அழைப்பையும் அப்போது ஏற்க பிரதமர் மோடி தயாராக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆத்திரத்தில் தான் இந்தியா மீது டிரம்ப் 50 சதவீத வரி விதித்து இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக, பிரதமர் மோடிக்கும் டிரம்புக்கும் இடையிலான கடைசி தொலைபேசி அழைப்பு ஜூன் 17 அன்று நடந்தது. டிரம்ப் கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து திடீரென வெளியேறி வாஷிங்டனுக்குத் திரும்பியபோது இந்த அழைப்பு நடந்தது. இதனால் ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ளும்போது டிரம்ப் மற்றும் மோடி இடையேயான இருதரப்பு சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. எனவே நாடு திரும்பும் வழியில் அமெரிக்கா வந்து செல்லும்படி டிரம்ப் கேட்டுக்கொண்டார். அதை பிரதமர் மோடி நிராகரித்து விட்டார். குரோஷியாவுக்குச் செல்வதாக முன்கூட்டியே உறுதியளித்திருந்ததால் அந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டது.
இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருக்கு அதிபர் டிரம்ப் தனிப்பட்ட முறையில் விருந்து அளித்தது இந்தியாவின் கோபத்தை அதிகரித்து விட்டது. இந்திய வர்த்தக ஒப்பந்தம் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாததால், கோபமடைந்த டிரம்ப் பிரதமர் மோடியை பல முறை தொடர்பு கொள்ள முயன்றார். இருப்பினும், அந்த கோரிக்கைகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், டிரம்ப், பிரதமர் மோடியை பல முறை தொடர்பு கொண்டதாக கூறப்படும் செய்தியை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மறுத்தார் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
* உண்மையான காரணம் என்ன?
அமெரிக்க நிதிச் சேவை நிறுவனமான ஜெப்ரீஸின் சமீபத்திய அறிக்கையில், இந்தியாவுக்கு எதிரான டிரம்பின் கோபத்திற்குப் பின்னால் உள்ள அடிப்படைக் காரணம், பாகிஸ்தானுடனான போரின் போது மத்தியஸ்தம் செய்ய இந்தியா அவரை அனுமதிக்க மறுத்த ஆத்திரத்தில் தான் இந்தியா மீதான உறவை இதுவரை இல்லாத அளவுக்கு டிரம்ப் கெடுத்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.