அமெரிக்க அதிபரின் வரிவிதிப்புக்கு எதிர்ப்பு ‘டிரம்ப் சிக்கன் பிரியாணி’ 25% தள்ளுபடியில் விற்பனை: சிவகாசி ஓட்டலில் புது ஆபர்
சிவகாசி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால், இந்திய பொருள்களுக்கு ஆக. 1 முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் 25% வரி விதித்துள்ளார். இதனை 50 சதவீதமாக உயர்த்தியுள்ள டிரம்ப், அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இதனால் அமெரிக்க பொருட்களை புறக்கணிப்பது போன்ற பிரசாரங்கள் வலைதளங்களில் வலுத்து வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பிரபல தனியார் ஓட்டல் ஒன்று அமெரிக்காவின் 25% வரிவிதிப்பை எதிர்த்தும், அதிபர் டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் தனது வாடிக்கையாளர்களுக்கு டிரம்ப் சிக்கன் பிரியாணியை அறிமுகப்படுத்தி, 25% தள்ளுபடி ஆபரையும் அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், அமெரிக்காவின் 25 சதவீத வரி விதிப்பை எதிர்த்து நமது ஓட்டலில் டிரம்ப் சிக்கன் பிரியாணி 25 சதவீதம் தள்ளுபடியில் விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையில் கை வைத்துள்ளது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தனியார் ஓட்டலின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.