அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார்: பூர்வீக கிராம மக்கள் நம்பிக்கை
இதையடுத்து அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. அடுத்த மாதம் 19ம் தேதி சிகாகோவில் நடக்க உள்ள ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில்தான் கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். கமலா ஹாரிசுக்குத்தான் அந்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பைங்காநாடு துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்டவர் கமலா. இவரது தாய் வழி தாத்தா பிவி கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள்.
ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சிவில் சர்வீசில் கோபாலன் பணியாற்றியவர். 1930ம் ஆண்டு ஜாம்பியா நாட்டுக்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுக்க அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டவர். பின்னர் அமெரிக்காவில் குடியேறினார். இவருக்கு சியாமளா, சரளா என இரு பெண் குழந்தைகள். இதில் சியாமளா ஜமைக்கா நாட்டை சேர்ந்த கருப்பினத்தவரான டொனால்டு ஹாரிஸ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு கமலா, மாயா என 2 பெண் குழந்தைகள். கமலாவின் கணவர் ஹாரிஸ். கமலா ஹாரிஸ் தான் அமெரிக்க துணை அதிபர். தற்போது அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.
இது அவரது பூர்வீக கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பைங்காநாட்டை சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் அருள்மொழி சுதாகர் கூறியதாவது: கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயிலில் வேண்டுதல் செய்கிறோம். அவர் வெற்றி பெறுவார். வெற்றி பெற்ற பிறகு அவர் பூர்வீக கிராமத்துக்கு ஒரு முறையாவது வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றார். வர்த்தக சங்க தலைவர் ஆனந்த் கூறியதாவது: கமலா ஹாரிஸ் அதிபரானால் இந்தியா, அமெரிக்கா இடையேயான நட்பு மேலும் வலுப்பெறும். அவரது தேர்தல் வெற்றி செய்திக்காக காத்திருக்கிறோம் என்றார்.