யுஎஸ் ஓபன் டென்னிஸ்: லெய்லாவை ஒயிலாக வென்ற சபலென்கா; 4ம் சுற்றுக்கு முன்னேற்றம்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான, யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் நடப்பு சாம்பியன், பெலாரசின் அரீனா சபலென்கா (27 வயது, 1வது ரேங்க்) ஒரு மணி 39 நிமிடங்களில் 6-3, 7-6 (7-2) என நேர் செட்களில் கனடாவின் லெய்லா ஃபெர்னாண்டசை (22 வயது, 30வது ரேங்க்) வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் (29 வயது, 139வது ரேங்க்), ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா (18 வயது, 5வது ரேங்க்) மோதினர்.
இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தால் மிரட்டிய டெய்லர் ஒரு மணி 16 நிமிடங்களில் 7-5, 6-2 என நேர் செட்களில் வெற்றிப் பெற்றார். இன்னொரு போட்டியில், பிரிட்டனின் எம்மா ராடுகானு (22 வயது, 36வது ரேங்க்), கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவிடம் (26 வயது, 10வது ரேங்க்) 6-1, 6-2 என நேர் செட்களில் வீழ்ந்தார். அதேபோல் நட்சத்திர வீராங்கனைகள் ஜாஸ்மின் பாலினி (இத்தாலி), எம்மா நவரோ (அமெரிக்கா), எல்லிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்), விக்டோரியா அசரென்கா (பெலாராஸ்) ஆகியோரும் 3வது சுற்றுடன் நடையை கட்டினர்.
* ஜோகோவிச், அல்காரஸ் 4வது சுற்றுக்கு தகுதி
ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2 மணி 50 நிமிடங்கள் விளையாடி பிரிட்டனின் கேமரான் நோரியை 6-4, 6-7 (4-7), 6-2, 6-3 என்ற செட்களில் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றில் விளையாட உள்ளார். அதேபோல் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஒரு மணி 44 நிமிடங்களில் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட்களில் இத்தாலியின் லுசியானோ டர்டெரியை வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
* இரட்டையர் பிரிவில் இந்தியர்கள் கலக்கல்
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் இந்தியாவின் ஏ.சந்திரசேகர்/வி.பிரசாந்த் இணை அமெரிக்காவின் சி.ஹாரிசன்/இ.கிங் இணையுடன் மோதியது. அதில் இந்திய இணை முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக் கணக்கில் இழந்தது. ஆனால் அடுத்த 2 செட்களை 6-3, 6-4 என்ற செட்களில் கைப்பற்றியது. அதனால் இந்திய இணை ஒரு மணி 42 நிமிடங்களில் 2-1 என்ற செட்களில் வெற்றிப் பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.