யுஎஸ் ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 சபலென்கா 2வது சுற்றுக்கு தகுதி; ஜாஸ்மின் பவோலினியும் வெற்றி
நியூயார்க்: யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 4வது மற்றும் ஆண்டில் கடைசித் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கியது. கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் சில நாட்களுக்கு முன் முடிந்த நிலையில் ஒற்றையர் சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை முடிந்தன.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடப்பு சாம்பியனான பெலாரசின் அரீனா சபலென்கா (27 வயது, முதல் ரேங்க்), சுவிட்சர்லாந்து வீராங்கனை ரெபேக்கா மாசரோவா (26 வயது, 108வது ரேங்க்) மோதினர். முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் சபலென்கா போராடி வென்றார். அடுத்து 2வது செட்ைட 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். அதனால் ஒரு மணி 21 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சபலென்கா 2-0 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலனா ஆஸ்டபென்கோ (லாத்வியா), ஜெசிகா பெகுலா, எம்மா நவரோ (அமெரிக்கா), ஜாஸ்மின் பவோலினி (இத்தாலி), லெய்லா பெர்னாண்டஸ் (கனடா), விக்டோரியா அசரென்கா(பெலாரஸ்) ஆகியோர் வெற்றிப் பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.