யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அசத்தலாட்டம் அட்டகாசம் அல்காரஸ்
நியூயார்க்: யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் அபார வெற்றி பெற்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவு ஆட்டம் ஒன்றில் யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியன், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் (22 வயது, 2வது ரேங்க்), அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா (27 வயது, 67வது ரேங்க்) மோதினர்.
அதில் கார்லோஸ் 2 மணி 5 நிமிடங்களில் 6-4, 7-5, 6-4 என நேர் செட்களில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பிரிட்டன் வீரர் ஜாக் டிரேபர் (23 வயது, 5வது ரேங்க்), அர்ஜென்டினா வீரர் அகஸ்டின் கோமஸ் (26 வயது, 203வது ரேங்க்) களம் கணடனர். அதில் டிரேபர் 6-4, 7-5, 6-7 (7-9), 6-2 என்ற செட்களில் வென்றார். இந்த ஆட்டம் 3 மணி ஒரு நிமிடம் நீடித்தது.
அதேபோல் ஃபிரான்சிஸ் டியாஃபோ (அமெரிக்கா), கேஸ்பர் ரூட் (நார்வே), ஹோல்கர் ரூனே (டென்மார்க்), ஆந்த்ரே ரூபலெவ் (ரஷ்யா) ஆகியோரும் முதல் சுற்றில் வென்று 2வது சுற்றில் விளையாட உள்ளனர். இந்திய வம்சாவளி அமெரிக்கர் நிஷேஷ் பசவரெட்டி (20 வயது, 104வது ரேங்க்), ரஷ்யாவின் கரென் காஸனோவ் (29 வயது, 9வது ரேங்க்) இடையிலான போட்டியில், 6-7 (5-7), 6-3, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் காஸனோவ் வெற்றி பெற்றார்.