யுஎஸ் ஓபன் டென்னிஸ் அமண்டா வென்றார் அரங்கம் அதிரவே
நியூயார்க்: யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா அபார வெற்றி பெற்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா (23 வயது, 9வது ரேங்க்), ஆஸ்திரேலியா வீராங்கனை மாயா ஜாய்ன்ட் (19 வயது, 43வது ரேங்க்) மோதினர்.
டைபிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை அமண்டா 7-6 (7-2) என்ற புள்ளிக்கணக்கில் போராடி கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். அதனால் ஒரு மணி 16 நிமிடங்களில் 2-0 என நேர் செட்களில் வென்ற அமண்டா 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.
நேற்று நடந்த மற்ற போட்டிகளில், இகா ஸ்வியாடெக் (போலந்து), கோகோ காஃப் (அமெரிக்கா), டாரியா கசட்கினா (ஆஸ்திரேலயா), நவோமி ஒசாகா (ஜப்பான்), மரியா சாக்ரி (கிரீஸ்), ஏக்தரினா அலெக்சாண்ட்ரோவா (ரஷ்யா) ஆகியோரும் 2வது சுற்றில் வென்று 3வது சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
* அடிபொளி கோபோலி
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நேற்று இத்தாலியின் ஃபிளவியோ கோபோலி (23 வயது, 26வது ரேங்க்), அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பி (24 வயது, 92வது ரேங்க்) மோதினர். அதில் கோபோலி 4 மணி 32 நிமிடங்கள் போராடி 5-7, 6-3, 6-4, 2-6, 7-6 (10-3) என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்றார்.
அதேபோல் போலந்தின் கமில் மெஜ்சர்ஜக் (29வயது, 76வது ரேங்க்) 4மணி 31 நிமிடங்கள் போராடி 2-6, 6-7 (4-7), 6-4, 7-5, 7-6 (10-5) என்ற செட்களில் கரென் காஸனோவை (29 வயது, 9வது ரேங்க்) வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் டாம்மி பால் 4 மணி 25 நிமிடங்கள் போராடி 7-6 (8-6), 6-3, 5-7, 5-7, 7-5 என்ற செட்களில் வென்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.
* இரட்டையர் பிரிவில் மிரட்டிய வீனஸ்
முன்னாள் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் (45), கனடாவின் இளம் வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் (22) உடன் இணைந்து மகளிர் இரட்டையர் பிரிவில் களமிறங்கினார். இந்த இணை முதல் சுற்றில் முன் வரிசை இணையான லிடிமிலா கிச்னோக் (33வயது, உக்ரைன்)/எலன் பெரெஸ் (29 வயது, ஆஸ்திரேலியா) இணையுடன் மோதியது. அதில் வீனஸ் இணை ஒரு மணி 30 நிமிடங்களில் 7-6 (7-4), 6-3 என நேர் செட்களில் போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.
* உலக பேட்மின்டன் காலிறுதியில் சிந்து தோல்வி
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டி ஒன்றில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, இந்தோனேஷியா வீராங்கனை புத்ரி குசுமா வர்தனி உடன் மோதினார். இப்போட்டியில் முதல் செட்டை 21-14 என்ற புள்ளிக் கணக்கில் புத்ரியும், 2வது செட்டை, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் சிந்துவும் கைப்பற்றினர். தொடர்ந்து நடந்த 3வது செட்டை, 21-16 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்திய புத்ரி, வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
* கலப்பு இரட்டையர் இந்திய இணை தோல்வி
கலப்பு இரட்டையர் பிரிவு பேட்மின்டன் காலிறுதிப் போட்டி ஒன்றில் இந்திய வீரர் துருவ் கபிலா, வீராங்கனை தனிஷா கிராஸ்டோ இணை, மலேசியா வீரர் செங் டாங் ஜீ, வீராங்கனை டோ எ வே இணையுடன் மோதியது. துவக்கம் முதல் அநாயாசமாக ஆடிய மலேசிய இணை, 21-16, 21-11 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, அரை இறுதிக்குள் நுழைந்தது.