அமெரிக்க உளவு துறையில் பணியாளர்கள் குறைப்பு: இயக்குனர் துளசி கப்பார்ட் நடவடிக்கை
வாஷிங்டன்: அமெரிக்க தேசிய உளவு துறையில் பணியாளர்களை குறைத்து அதன் தலைவர் துளசி கபார்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் ஆட்குறைப்பு,நிதி ஒதுக்கீடு குறைப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் தேசிய புலனாய்வு துறையில் பணியாளர்கள் திடீரென குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் உளவு துறைக்கான வருடாந்திர பட்ஜெட்டும் குறைக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு துறை இயக்குனர் துளசி கப்பார்ட் கூறுகையில்,‘‘ கடந்த 20 ஆண்டுகளில் புலனாய்வு துறை திறமையற்றதாக மாறி விட்டது. அதிகார துஷ்பிரயோகம், அங்கீகரிக்கப்படாத கசிவுகள், அரசியல் மயமாக்கல் என பல்வேறு சீர்கேடுகள் ஏற்பட்டு விட்டது. எனவே இந்த துறையை மறுசீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக 40% க்கும் அதிகமான பணியாளர் குறைக்கப்படுகின்றனர். வருடாந்திர பட்ஜெட் ஒதுக்கீடும் ரூ.61 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.