அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது அக்டோபரில் அதிகரிப்பு
டெல்லி: அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது அக்டோபரில் அதிகரித்துள்ளது. உக்ரைனுடனான போரின் காரணமாக ரஷ்யாவின் மிக பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான ரோஸ்நெப்ட், லுகோயில் ஆகிவற்றுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதன் மூலம் எந்த ஒரு அமெரிக்க மற்றும் வெளிநாட்டு நிறுவனமும் தடை செய்யப்பட்ட ரஷ்ய நிறுவனங்களுடன் வணிக ஒப்பந்தங்களை செய்ய முடியாது. இதை மீறினால், அபராதம் மற்றும் தண்டனையை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.ரோஸ் நெப்ட் மற்றும் லுகோயில் சம்பந்தப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளும் நவம்பர் 21 ம் தேதிக்குள் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.
ரஷ்யா தற்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது. இந்நிலையில் இந்த ஆண்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 17 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 12 லட்சம் பீப்பாய்கள் ரோஸ் நெப்ட் மற்றும் லுகோயிலிலிருந்து நேரடியாக வந்தது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது செப்டம்பரில் 17 சதவீதம் குறைந்தது. கடந்த செப்டம்பரில் 6.6 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது அக்டோபரில் அதிகரித்துள்ளது.
2021 மார்ச்சுக்கு பிறகு இந்தியா, கடந்த மாதம் அதிக அளவில் அமெரிக்காவிடம் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. அக்டோபர் மாதத்தில் அமெரிக்காவிடம் இந்தியா நாளொன்றுக்கு 5,93,000 பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது.