அமெரிக்க வரி விதிப்பு பாதிப்பை தடுக்காதது ஏன்..? ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்
திருச்சி: அமெரிக்க வரி விதிப்பால் தமிழ்நாடு பாதிப்பு அடைந்துள்ளது என வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அமெரிக்காவின் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு பல தொழில்களில் பாதிப்பு அடைந்துள்ளது. குறிப்பாக திருப்பூர் பின்னலாடைகள், பால் உற்பத்தி தொழிலாளர்கள் இதனால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திமுகவை வேரோடு அகற்றி எறிய வேண்டும் என கூறியுள்ளார். இது கண்டனத்திற்குரியது.
அரசியல் களத்தில் கட்சிகளை வெற்றி பெற வேண்டும் என அக்கட்சி தொண்டர்களை அறிவுறுத்துவது ஜனநாயகம். ஆனால் பல முன்னோடிகள் ஒன்றிணைந்து ரத்தம் சிந்தி வளர்த்த திமுகவை இவ்வாறு விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அயல்நாடு பயணத்தின் வாயிலாக முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் ஈர்த்துள்ளார். இது குறித்து அவர் நாடு திரும்பியவுடன் விரைவாக எடுத்துரைப்பார். அதற்குள் வெள்ளை அறிக்கை கேட்பது நியாயமற்றது. ஜிஎஸ்டி கூட்டத்திற்கு 18 கோரிக்கைகளை தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் முன் வைத்துள்ளனர். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.