அமெரிக்க வரி உயர்வின் தாக்கத்தை குறைக்க செயல் திட்டம் வகுக்கப்படும்: ஒன்றிய அரசு அதிகாரி தகவல்
புதுடெல்லி: ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 % வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி உயர்வு இந்திய ஏற்றுமதி துறையை கடுமையாகப் பாதிக்கும்.
இந்நிலையில் ஒன்றிய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அனுராதா தாக்குர் கூறுகையில், ‘‘ அமெரிக்காவின் தொடர்புடைய வேலை வாய்ப்பு அதிகம் உள்ள சில துறைகள் பாதிக்கப்படலாம். அரசு இதை நன்கு அறிந்திருக்கிறது. சாத்தியமான தாக்கத்தை மதிப்பிட்டு அதற்கு சரியான தீர்வுகளை கண்டுபிடிப்பதை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு தேவையை அதிகரிக்க அரசு ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளது.
ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி எதுவும் இல்லை என பட்ஜெட்டில் அரசு அறிவித்தது. இது வரி செலுத்துவோருக்கு இது கணிசமான சேமிப்பை வழங்குகிறது. இனி மேல் வரி விகிதங்கள் மாற்றப்பட உள்ளதால் பொருட்களின் விலைகள் குறையும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்ததை விட சிறப்பாக பெய்யும் பருவமழை விவசாய உற்பத்தியை அதிகரிக்கும். இது கிராமப்புற தேவையை மேலும் அதிகரிக்கும்’’ என்றார்.