அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு முடிவு எட்டப்படாமல் நிறைவு
அலாஸ்கா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு முடிவு எட்டப்படாமல் நிறைவு பெற்றது. உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இரு தலைவர்களும் 3 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 3 மணி நேர பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர், உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலமுறை பேசினார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்த போதிலும் போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில்தான், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப் - ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படை தளத்தில் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இந்த சந்திப்பில் பங்கேற்பதற்காக புதின் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் தனி விமானத்தில் அலாஸ்கா சென்றார். அலாஸ்கா ராணுவ படை தளத்தில் வந்து இறங்கிய புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை டொனால்டு டிரம்ப் நேரில் சென்று கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் இருவரும் சந்தித்து பேசினார்கள்.
அப்போது ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர். இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது;
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை, இருப்பினும் பேச்சுவார்த்தை நல்ல தொடக்கமாக அமைந்தது என கூறினார்.
புதின் கூறியதாவது: எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் அதிபராக இருந்திருந்தால், போர் தொடங்கியிருக்காது. பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன். உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அமெரிக்கா - ரஷ்யா இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் மாஸ்கோவில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.