அமெரிக்காவில் லாரிகள் மீது மோதி வெடித்து சிதறிய விமானம்: விமானி உட்பட இருவர் உடல் கருகி பலி
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், சாலையோரம் நின்றிருந்த லாரிகள் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் வொர்த் நகருக்கு அருகே ஹிக்ஸ் விமானத்தளம் அமைந்துள்ளது. இந்த விமானத்தளத்திற்கு அருகே நேற்று பீச்கிராஃப்ட் கிங் ஏர் 90 என்ற சிறிய ரக விமானம் பறந்து கொண்டிருந்தது.
அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், சாலையோரம் நின்றிருந்த கனரக லாரிகள் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் விமானம் வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஃபோர்ட் வொர்த், ஹாஸ்லெட் மற்றும் சாகினா ஆகிய தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
விபத்தைப் நேரில் பார்த்தவர்கள், விமானம் மோதியதும் ‘பிரம்மாண்டமான நெருப்புக் கோளமாக’ காட்சியளித்ததாக தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் எழுந்த கரும்புகை மண்டலம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தெரிந்தது. விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன.