யுஎஸ் ஓபன் டென்னிஸ்: இகா மெகா வெற்றி
4வது சுற்றுக்கு முன்னேற்றம்
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 3வது சுற்று போட்டியில் நேற்று, போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக், ரஷ்ய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயாவை அபாரமாக வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் போலந்தை சேர்ந்த, உலகின் 2ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியடெக் (24), ரஷ்ய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா (26) மோதினர். முதல் செட்டில் இருவரும் சளைக்காமல் போராடியதால் டைபிரேக்கர் வரை நீண்டது. அந்த செட்டை, 7-6 (7-2) என்ற புள்ளிக் கணக்கில் இகா கைப்பற்றினார்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டை, அசத்தலாக ஆடிய இகா, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிஸிமோவா (24), ரோமானிய வீராங்கனை ஜாக்குலின் அடினா கிறிஸ்டியன் (27) மோதினர். இருவரும் சமபலத்துடன் மோதியதால், முதல் இரு செட்களில் ஆளுக்கொன்றாக கைப்பற்றினர். இருப்பினும் 3வது செட்டை அமண்டா எளிதில் வசப்படுத்தினார். அதனால், 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்ற அமண்டா 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
4வது சுற்றில் சின்னர்
சவால் போட்டியில் சாதித்த ஃபெலிக்ஸ்
யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, ஜெர்மனியை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ் (28), கனடா வீரர் ஃபெலிக்ஸ் அகர் அஸியாஸிமே (25) மோதினர். கடும் சவாலாக இருந்த இந்த போட்டியில், 4-6, 7-6 (9-7), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஃபெலிக்ஸ் வென்று 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் டிமினார் (26), ஜெர்மனி வீரர் டேனியல் அல்ட்மெயரை, 6-7 (7-9), 6-3, 6-4, 2-0 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர் (24), 5-7, 6-4, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் கனடா வீரர் டெனிஸ் விக்டோரோவிச் ஷபபோவலோவை (26) வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.