யுஎஸ் ஓபன் முதல் அரை இறுதியில்: ஜோரான ஜோகோவிச்; அட்டகாச அல்காரஸ்
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில், முன்னாள் சாம்பியன்கள் நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்காரஸ் களம் காணவுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதிலொரு ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (38 வயது, 7வது ரேங்க்), அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் (27 வயது, 4வது ரேங்க்) மோதினர். இப்போட்டியில் அபாரமாக ஆடிய ஜோகோவிச், 6-3, 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடி அரையிறுதிக்கு முன்னேறினார். அவர், ஆஸ்திரேலியா, பிரெஞ்ச், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் என 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 53வது முறையாக அரையிறுதியில் விளையாட இருக்கிறார்.
மற்றொரு காலிறுதியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் (22 வயது, 2வது ரேங்க்), செக் குடியரசின் ஜிரி லெஹகா (23 வயது, 21வது ரேங்க்) களம் கண்டனர். அதில் அல்காரஸ் ஒரு மணி 56 நிமிடங்களில் 6-4, 6-2, 6-4 என நேர் செட்களில் ஜிரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். தொடர்ந்து நாளை மறுதினம் நடைபெற உள்ள முதல் அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான ஜோகோவிச் - அல்காரஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
வீனஸ் ஏமாற்றம்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா)/லெய்லா பெர்னாண்டஸ் (கனடா) இணை, உலகின் நெம்பர் ஒன் இணையான கேத்ரினா சினியகோவா (செக்குடியரசு)/டெய்லர் டவுன்செண்ட்(அமெரிக்கா) உடன் களம் கண்டது. அதை வெறும் 56 நிமிடங்களில் 1-6, 2-6 என நேர் செட்களில் வீனஸ் இணை இழந்து வெளியேறியது. கேத்ரினா/டெய்லர் இணை அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
மகளிர் செமிபைனலில்: சரவெடி சபலென்கா அதிவேக ஜெஸிகா
மகளிருக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நேற்று பெலாரசின் அரினா சபலென்கா (27 வயது, 1வது ரேங்க்), செக் குடியரசின் மார்கெடா வோண்ட்ரசோவா (26 வயது, 60வது ரேங்க்) ஆகியோர் மோத இருந்தனர்.
ஆனால் முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக மார்கெடா போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனால் நடப்பு சாம்பியன் சபலென்கா எளிதாக அரையிறுதிக்கு முன்னேறினார். அதன் மூலம் யுஎஸ் ஓபன் அரையிறுதியில் தொடர்ந்து 5வது முறையாக சபலென்கா களம் காண உள்ளார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா (31 வயது, 4வது ரேங்க்), செக் குடியரசு வீராங்கனை பார்பரா கிரெஜ்சிகோவாவை (29 வயது, 62வது ரேங்க்) 6-3, 6-3 என நேர் செட்களில் ஜெஸிகா பெகுலா வென்றார். ஜெஸிகா பெகுலா-சபலென்கா நாளை நடக்கும் அரையிறுதியில் மோத உள்ளனர்.
காலிறுதியில் யூகி போம்ரி
ஆண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் யூகி போம்ரி(இந்தியா), மிக்கேல் வீனஸ்(ஆஸ்திரேலியா) இணை, ஜெர்மனியின் கெவின் கிரவியட்ஸ்/டிம் புயெட்ஸ் இணை உடன் மோதியது. அதில் இந்திய இணை ஒரு மணி 22 நிமிடங்களில் 6-4, 6-4 என நேர் செட்களில் வென்று காலிறுக்கு முன்னேறி அசத்தியது.