அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு என்ன காரணம்?: ஒன்றிய அரசின் அதீத நம்பிக்கையும், தவறான கணிப்புமே காரணம் என தகவல்
டெல்லி: இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு என்ன காரணம். 5 சுற்றுகளாக பேச்சு வார்த்தை நடைபெற்றும் முன்னேற்றம் ஏற்படாதது ஏன். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவிற்கு 25% வரி விதிக்கப்படும் என்றும் இன்று வரிவிதிப்பு அமலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். அமெரிக்காவுக்கான வரி அதிக அளவில் இருப்பதாலும், இந்தியா - ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதினாலுமே இத்தகை வரி விதிப்பு என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்தியா மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்புக்கு ஒன்றிய அரசின் அதீத நம்பிக்கையும், தவறான கணிப்புகளுமே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரி விதிப்பு பிரச்னைக்கு தீர்வு காண இரு நாடுகளுக்கு இடையே 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில தொழிற்சாலை பொருட்களுக்கு இந்தியா முற்றிலுமாக வரியை குறைக்க ஒப்புக்கொண்டது. ஆனால் அதே சமயத்தில் கார்கள் மதுபானங்கள் மீதான வரியை இந்தியா குறைக்கவில்லை. அமெரிக்காவுடன் எரிசக்தி மற்றும் பாதுகாப்புத்துறைகளில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரிக்காததும் ட்ரம்ப் கோவத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மோடியின் அமெரிக்க பயணத்தை அடுத்து சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போர் விவகாரத்தில் ட்ரம்ப் உடனான மோதல், இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இதனால் இந்தியா மீதான கோபத்தில் ட்ரம்ப் 50 சதவீதம் வரியை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.