அமெரிக்கா-சீன வர்த்தக போர் வரி விதிப்பு 90 நாட்களுக்கு ஒத்திவைப்பு: பின்வாங்கிய அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்கா- சீனா இடையேயான புதிய வரி விதிப்பு நடைமுறைக்கு வருவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக மேலும் 90 நாட்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக நாடுகள் மீது வரிகளை விதித்து வருகின்றார். ஒப்பந்தம் எட்டப்பட்ட நாடுகளுக்கு குறைந்த வரி, ஒப்பந்தம் எட்டப்படாத நாடுகளுக்கு அதிக வரி விதிப்பு என்று அதிபர் டிரம்ப வரியை விதித்து வருகின்றார். மே மாதம் அதிபர் டிரம்ப் சீனா மீது 145 சதவீத வரிகளை விதிப்பதாக தெரிவித்தார். இதற்கு பதிலடியாக சீனா 125 சதவீத வரிகளை விதிப்பதாக தெரிவித்தது.
மேலும் அரிய வகை கனிமங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. அமெரிக்க விதித்த 145சதவீத வரி நடைமுறைக்கு வருவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக டிரம்ப் இதனை நிறுத்தி வைத்தார். மே மாதம் ஜெனீவாவில் நடந்த அமெரிக்கா- சீனா பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாடுகளும் பரஸ்பரம் தங்களது வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்திவைப்பதற்கு ஒப்புக்கொண்டன. பின்னர் ஜூலையில் ஸ்டாக்ஹோமில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. நேற்று நள்ளிரவு 12மணிக்கு ஏற்கனவே விதித்த காலக்கெடு முடிவடையும் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் காலக்கெடு முடிவடைவதற்கு முன்னதாக அமெரிக்கா- சீனா வர்த்தக போர் நிறுத்தம் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் இந்த நீட்டிப்புக்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ஒப்பந்தத்தின் மற்ற அனைத்து கூறுகளும் அப்படியே இருக்கும் என்றும் டிரம்ப் தனது சமூக வலைளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அமெரிக்க-சீன வணிக கவுன்சிலின் தலைவர் கூறுகையில்,”இந்த கால நீட்டிப்பு இரு அரசுகளும் வர்த்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவகாசம் அளிப்பதற்கு முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.