உ.பி. டி20 லீக்: ரிங்கு சிங் ருத்ரதாண்டவம்; 48 பந்துகளில் 108 ரன் குவிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேச டி20 லீக் தொடரில் மீரட் மேவரிக்ஸ் அணியின் கேப்டன் ரிங்கு சிங், 48 பந்துகளில் 108 ரன் குவித்து தனது அணியை வெற்றிபெற செய்தார். லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கோரக்பூர் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மீரட் மேவரிக்ஸ் அணி, தொடக்கத்திலேயே சறுக்கியது. 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தபோது, அந்த அணியின் கேப்டன் ரிங்கு சிங் களம் புகுந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் தனி ஒருவனாக நின்று அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினார்.
தொடக்கத்தில் நிதானமாக ஆடிய ரிங்கு சிங், 34 பந்துகளில் 57 ரன்களை மட்டுமே எட்டியிருந்தார். அதன் பிறகு கியரை மாற்றிய அவர், பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். குறிப்பாக, கடைசி 14 பந்துகளில் 51 ரன்களை விளாசி மைதானத்தை அதிர வைத்தார். மொத்தம் 48 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 7 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 108 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.அவருக்கு அடுத்தபடியாக அணியில் அதிகபட்ச ஸ்கோரே 22 ரன்கள்தான். இதன் மூலம், ரிங்கு சிங்கின் இந்த ஆட்டம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிய முடிகிறது. அவரது இந்த `ஒன் மேன் ஷோ’ காரணமாக மீரட் அணி 18.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங்கின் இடம் குறித்து விவாதங்கள் நடந்து வரும் நிலையில், அவர் அபாரமாக ஆடி இத்தகைய சதத்தை அடித்துள்ளார். மேலும், இது அணி நிர்வாகத்துக்கு ரிங்கு சிங்கை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் ரிங்கு சிங்கின் இந்த ஆட்டத்தை கொண்டாடி வருகின்றனர்.