பொள்ளாச்சியில் பழமையான அரச மரத்தை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பல்லடம் ரோடு-நியூஸ்கீம் ரோடு சந்திப்பு பகுதியில் விநாயகர் கோயிலுடன் பழமையான அரசமரம் இருந்தது. இந்நிலையில், அப்பகுதியை விரிவுப்படுத்தி வாகன போக்குவரத்து வசதிக்காக அந்த மரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே அந்த மரத்தை உயிருடன் வேறு பகுதியில் நடவு மேற்கொள்ள முயற்சி நடைபெற்றது. இதற்காக அந்த மரக்கிளைகள் அனைத்தும் வெட்டி அகற்றபட்டது. மரத்தில் வெட்டிய பாகம் மீண்டும் துளிர் விடுவதற்கு வசதியாக வெட்டப்பட்ட கிளை பகுதி பாதுகாக்கப்பட்டது. இந்நிலையில், பழமையான அரச மரத்தை வேறுடன் பிடுங்கி மாற்று இடத்தில் வைத்து தழைக்க வைக்க இடம் தேர்வு பணி நடைபெற்றது.
இதில், பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு மண்டபம் அருகே ரோட்டோரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேற்று அந்த ஆலமரத்தை கிரேன் மூலம் வேருடன் எடுத்து, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மாற்றி வைத்தனர். தற்போது அந்த மரம் தளைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.