உப்பட்டி மயான இடத்தில் இறந்தவரை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததால் பரபரப்பு
பந்தலூர் : பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட உப்பட்டி பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு பொது மயானம் உள்ளது.
இந்நிலையில், நேற்று அப்பகுதியில் வசித்து வந்த சுப்பிரமணி என்பவர் இறந்து விட்டார். இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒரு நபர் இது என்னுடைய நிலம் இங்கு புதைக்க கூடாது என தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் இறந்தவர் உடலுடன் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பந்தலூர் தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பந்தலூர் தாசில்தார் சிராஜுன்னிஷா மற்றும் வருவாய்துறையினர் மயான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த போது இடம் மயானத்திற்கு சொந்தமான இடம் என தெரியவந்தது. இதில் பிரச்னை செய்த நபருக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்று தெரிவித்து இறந்தவர் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சிரிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மயானத்திற்கு சொந்தமான இடத்தை வருவாய்துறையினர் உறுதி செய்து பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைத்துதர நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.