“நீங்கள் 50 துண்டுகளாகக் காணப்படுவீர்கள்” - உ.பி. ஆளுநர் ஆனந்திபென் சர்ச்சை பேச்சு
லக்னோ: திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது குறித்து விமர்சித்து உ.பி. ஆளுநர் ஆனந்திபென் சர்ச்சையில் சிக்கி உள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பாலியாவில் உள்ள ஜனநாயக் சந்திரசேகர் பல்கலைக்கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆனந்திபென் படேல்; திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழக்கூடாது, சேர்ந்து வாழ்ந்தால் அவர்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவார்கள்.
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் இடையே வன்முறை சம்பவங்கள் நடக்கிறது. சேர்ந்து வாழும் 15லிருந்து 20 வயதுக்குட்பட்ட பல பெண்கள், கையில் குழந்தையுடன் நிற்கின்றனர். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகவது அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களாக, இதுபோன்ற செய்திகள் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன, அவற்றைப் பார்க்கும்போதெல்லாம், அவர்களை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். பாதிக்கப்பட்ட சிறுமிகளை நேரில் சந்தித்தேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சோகமான மற்றும் தனித்துவமான கதை இருக்கிறது. ஒரு நீதிபதியுடனான சந்திப்பின் போது அவரும் பெண்கள் மீது அக்கறை கொண்டு பேசினார்.
லிவ்-இன் உறவுகளுக்கு இரையாகாமல் தடுக்க மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அனைத்து பல்கலைக்கழகங்களையும் வலியுறுத்தினார்” என்று கூறினார்.