உபி அரசு அலுவலகத்தில் புகுந்து இன்ஜினியரை செருப்பால் அடித்த பா.ஜ பிரமுகர்: 20 பேர் கும்பலுடன் சென்று அட்டகாசம்
பல்லியா: உபி அரசு அலுவலகத்தில் புகுந்து இன்ஜினியரை செருப்பால் அடித்த பா.ஜ பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள மின்சாரத் துறை அலுவலகத்தில், ஒரு தலித் பொறியாளரை பாஜக ஊழியர் ஒருவர் காலணியால் தாக்கிய வீடியோ நேற்று வைரலானது. அந்த வீடியோவில் இருப்பவர் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் லால் சிங் ஆவார். அவரது அலுவலகத்தில் பாஜகவின் முன்னாள் மண்டலத் தலைவர் என்று கூறிக்கொண்ட முன்னா பகதூர் சிங் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் புகுந்தனர்.
முன்னா பகதூர் சிங் கையில் செருப்புடன் சென்று லால்சிங்கை தாக்கினார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே லால்சிங் தாக்கியதாக கூறி முன்னா சிங்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அருகிலுள்ள கிராமங்களில் மின் தடை குறித்து மின்சார அலுவலகத்திற்கு புகாரளிக்கச் சென்றபோது பொறியாளர் முதலில் தன்னைத் திட்டியதாகவும், அலுவலக ஊழியர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாகவும் தெரிவித்தார். வீடியோ வைரலானதால் முன்னா பகதூர் சிங் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.